சுல்தான் – மண்ணுக்காக போராடும் அந்நியன்

0 147

தயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – பாக்யராஜ் கண்ணன்
இசை – விவேக் மெர்வின்
நடிப்பு – கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா, யோகி பாபு
நேரம் – 2 மணி நேரம் 37 நிமிடம்

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு தெலுங்குப் படத்தைப் பார்க்கிறோமோ என்ற உணர்வு படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திலேயே வந்துவிடுகிறது.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படத்தில் காட்டப்படும் பின்னணி அனைத்திலுமே தெலுங்கு வாசம் தான் வீசுகிறது. எங்காவது ஒரு இடத்திலாவது தமிழ்ப் படம் என்ற உணர்வைத் தருபவர்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரு சிலர் தான்.

படத்தின் கதைக்காகவெல்லாம் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் அதிகம் யோசிக்கவில்லை. “தேவர் மகன், பல்லாண்டு வாழ்க, உனக்கும் எனக்கும், கத்தி, மேலும் சில பல தெலுங்குப் படங்கள் ஆகியவற்றைக் கலந்து குலுக்கி, அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என எடுத்து இந்த சுல்தான் கதையை எழுதியிருக்கிறார். தமிழில் படம் எடுப்பதை விட்டு தெலுங்கிற்குச் சென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

சென்னையையே அலற வைத்த தாதா நெப்போலியன். அவரது மகன் கார்த்தி, மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கிறார். அப்பாவின் தொழில் பிடிக்காமல் எப்போதோ ஒரு முறைதான் ஊருக்கு வருவார்.

சேலம் பக்கம் உள்ள கிராமத்தினர் அவர்களது கிராமத்தை ரவுடி ஒருவனிடமிருந்து காப்பாற்றித் தருமாறு நெப்போலியனிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நிச்சயம் காப்பாற்றுவேன் என சத்தியம் செய்கிறார். போலீஸ் திட்டமிட்டு நடத்திய என்கவுன்டரில் நெப்போலியன் சாகடிக்கப்படுகிறார்.

அப்பாவிடம் இருந்த மீதியுள்ள 100 ரவுடிகளைக் காப்பதற்காக அப்பா வாக்கு கொடுத்த அந்த சேலம் கிராமத்திற்குச் செல்கிறார் கார்த்தி. அங்கு ராஷ்மிகாவுடன் காதல், கிராமத்தைக் காப்பாற்ற வில்லனுடன் மோதல் என போகிறது. கிராமத்தை அபகறிக்கத் திட்டமிடும் கார்ப்பரேட் வில்லனிடமிருந்து கார்த்தி கிராமத்தைக் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு தமிழ் சினிமா ஹீரோ வழக்கமாக என்ன செய்வாரோ அவையைனைத்தையும் வழக்கம் போல் செய்கிறார் கார்த்தி. காதலிக்கிறார், சண்டை போடுகிறார், நியாயத்திற்காகப் போராடுகிறார் கூடவே விவசாயமும் செய்கிறார்.

கைதி போன்ற படங்களில் கார்த்தியைப் பார்த்த பிறகு இனி, வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவரை அதிகம் பார்க்கலாம் என்று எந்த ரசிகராவது நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

நானும் அடிக்கடி இது போல மசாலா படங்களில் நடிப்பேன் என நடித்திருக்கிறார் கார்த்தி. ஏன் கார்த்தி ஏன் ?.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு நாயகி ராஷ்மிகா மந்தண்ணா மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. தெலுங்கில், ஏன் கன்னடத்தில் கூட அவரை அழகு தேவதையாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் சீக்கு வந்த கோழி போல ஏன் காட்டியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

அவருடைய மேக்கப்பும் சரியில்லை, அவருடைய காஸ்ட்டியூம்களும் சரியில்லை. தமிழ் சினிமாவில் ராஷ்மிகாவின் வருகையைக் கொண்டாடக் காத்திருந்த ராஷ்மிகா ரசிகர்களின் கோபத்திற்கு ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் நிச்சயம் ஆளாவார்கள்.

சரி, அவராவது நன்றாக நடித்து அந்தக் குறையை மறக்க வைப்பார் என்று பார்த்தால், படம் முழுவதும் பல்லைக் கடித்துக் கொண்டே வசனம் பேசுகிறார். ஒய் ராஷ்மி செல்லாம் ஒய் ?. அடுத்த தமிழ்ப் படத்திற்காகக் காத்திருக்கிறோம்.

கிராமத்து மக்களை மிரட்டும் வில்லனாக கேஜிஎப் பட வில்லன் ராம், கார்ப்பரேட் வில்லனாக நவாப் ஷா சில காட்சிகளில் வந்து போகிறார்கள். கார்த்தியின் அப்பாவாக நெப்போலியன், அம்மாவாக அபிராமி கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்து இறந்து விடுகிறார்கள்.

கார்த்தியை வளர்ப்பவராக லால். அவருக்குத் துளியும் பொருத்தமில்லாத பின்னணிக் குரல். மற்ற கதாபாத்திரங்களில் பொன்வண்ணன், ரமா, சிங்கம்புலி, மயில்சாமி, மாரிமுத்து ஆகியோருக்கு சில வரி வசனங்களை வைத்திருக்கிறார்கள்.

மற்றபடி 100 ரவுடிகளுக்கும் மேல் படத்தில் இருக்கிறார்கள். அந்த 100 ரவுடிகளில் ஒருவராக யோகிபாபு. எந்த இடத்திலும் அவர் சிரிக்க வைக்காமல் போவது ஆச்சரியம்தான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது மற்ற படங்களின் படப்பிடிப்பை நடத்த அடியாட்களே கிடைத்திருக்க மாட்டார்கள். ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவரும் இந்தப் படத்திலேயே இருந்தால் எப்படி கிடைப்பார்கள் ?.

படத்தைக் கொஞ்சமாவது ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை முக்கிய காரணம்.

எங்கு எந்த டெம்போவை ஏத்த வேண்டுமோ அதை சரியாக ஏற்றி கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு சரியான பில்டப் கொடுக்கிறார். விவேக் மெர்வின் இசையில் எப்படி இருந்த நாங்க.. பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது.

படத்தில் ரசிக்க வைக்கும் விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு விவசாயம் என்ற வாழ்வாதாரத்தைப் புரிய வைத்ததற்குப் பாராட்டலாம்.

ரவுடியா அடிச்சாத்தானே தப்பு, விவசாயியா அடிக்கலாமில்ல என கிளைமாக்சில் ஒரு ரவுடி, சாரி விவசாயி வசனம் பேசுவார். அதற்காக மட்டும் இயக்குனருக்கு ஒரு மூட்டை நெல்லைத் தருவதற்குப் பதில் ஒரு பிடி நெல்லை பரிசாக அளிக்கலாம்.