கர்ணன் – காவல் தெய்வம்

0 154

தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – சந்தோஷ் நாராயண்
நடிப்பு – தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு
நேரம் – 2 மணி நேரம் 39 நிமிடம்

ஒரு இனம், ஒரு மொழி என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு இன்னமும் சாதிய வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அடிக்கடி சாதிய மோதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் இதுநாள் வரையிலும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய படங்கள் அதிகம் வந்ததில்லை.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரது வருகைக்குப் பின் அந்த மக்களின் வலிகளைச் சொல்லும் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியான ஒரு படம்தான்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் இந்த சாதிய வேறுபாடுகளை கொஞ்சம் மென்மையாகக் கையாண்டிருந்தார். ஆனால், இந்த கர்ணன் படத்தில் நாயகனை வாளேந்த வைத்து அவர்களது உரிமைக்காகப் போராட வைத்திருக்கிறார்.

போர் என்றாலே ரத்தமில்லாமலா இந்த கர்ணனும் ரத்தம் சிந்துகிறார், மற்றவர்களையும் ரத்த சிந்த வைக்கிறார். இந்த ரத்தம் மட்டும் அதிகம் தெறிக்காமல் இருந்திருந்தால் படத்தை இன்னும் அதிகமாகக் கொண்டாடுவார்கள்.

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 1995ம் ஆண்டு இரு சாதி மக்களிடையே நடைபெற்ற மோதல் காரணமாக பெரும் கலவரம் வெடித்தது. கொடியன்குளம் என்ற கிராமத்திற்குள் புகுந்து போலீசார் கோர தாண்டவம் ஆடினர்.

போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருவர் கொல்லப்பட்டனர், 500 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்தது.

அந்த கொடியன்குளம் கலவரத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்தில் உள்ள கிராமத்திற்கு வைக்கப்பட்டுள்ள பொடியன்குளம் என்ற பெயரிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

படத்தில் நாயகன் தனுஷின் கதாபாத்திரப் பெயர் கர்ணன், அவரது காதலி ரெஜிஷா விஜயன் பெயர் திரௌபதி. ஊரில் உள்ள மற்ற கதாபாத்திரங்களுக்கும் மகாபாரதக் கதாபாத்திரப் பெயர்களையே வைத்திருக்கிறார் இயக்குனர்.

போலீஸ் எஸ்.பி. நட்ராஜ் பெயர் கண்ணபிரான். தங்கள் உரிமையைக் கேட்கும் கிராமத்து மக்களின் போராட்டத்தை அவர் மகாபாரதப் போருடன் ஒப்பிடுகிறாரோ ?.

பொடியன்குளம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களது கிராமத்தில் எந்த ஒரு பேருந்தும் நிற்காது. ஆனால், பக்கத்து கிராமமான மேலூரில்தான் நிற்கும்.

அந்தக் கிராமத்தில் உள்ள வேறு சாதி மக்களுக்கு இந்த பொடியன்குளம் கிராமத்து மக்கள் தங்களது கிராமத்தில் வந்து பேருந்து ஏறுவதை வெறுப்பவர்கள். அதனால், இரு கிராமத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதலும் நடைபெறுவதுண்டு.

தங்கள் கிராமத்தில் பேருந்து நிற்க அவர்கள் எவ்வளோ முயற்சித்தும் நடக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேருந்தை அடித்து உடைக்கிறார்கள். அதை கிராமத்து இளைஞன் கர்ணன் (தனுஷ்) முன்னின்று செய்கிறார். ஊருக்குள் போலீஸ் வருகிறது. எஸ்.பி. கண்ணபிரானை (நட்ராஜ்) ஊர் மக்கள் அவமதித்து அனுப்புகிறார்கள்.

அந்தக் கோபத்தில் ஊர் பெரியவர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கி அவர்களை சிறை வைக்கிறார். தனுஷ் மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்த ஸ்டேஷனையே சூறையாடி தங்கள் கிராமத்துப் பெரியவர்களை மீட்டு வருகிறார்கள்.

திரும்பவும் போலீஸ் கிராமத்திற்குள் வரும் என நினைக்கும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊருக்குக் காவல் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கர்ணனுக்கு சிஆர்பிஎப் வேலையில் சேர ஆர்டர் வருகிறது.

ஊர் மக்கள் அவரை வேலைக்குச் சேர வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார்கள். அந்த சமயத்தில் போலீசார் பெரும் படையுடன் ஊருக்குள் வருகிறார்கள். கிளம்பிச் சென்ற தனுஷ் திரும்பி வந்தாரா, ஊருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

அசுரன் படத்திற்குப் பிறகு மீண்டும் அசுரத்தமான நடிப்பில் தனுஷ். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவரை தனுஷ் என நினைத்துப் பார்க்க முடியாமல் கர்ணன் என்றே நினைத்துப் பார்க்க முடிகிறது.

சாதாரண பழைய லுங்கி, ஒரு சட்டை அவ்வளவுதான் தனுஷின் காஸ்ட்யூம். தனுஷைத் தவிர இன்றைய வேறு எந்த ஒரு நடிகராவது இந்தக் கதாபாத்திரத்தில் இப்படி அசுர பலத்துடன் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை படத்திற்குப் படம் வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்கிறார் தனுஷ். இந்த கர்ணன் படத்தையும் தேசிய விருதுகளுக்கான சில பல பட்டியல்களில் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

படத்தின் நாயகியைப் பற்றி சொல்வதற்கு முன்பு தனுஷ் கூடவே இருக்கும் ஊரின் தாத்தா லால்-ஐப் பற்றிச் சொல்ல வேண்டும்.

ஒரு மலையாள நடிகர் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்துத் தாத்தாவாக அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் மஞ்சனத்தி பாடல் பாடும் போது நம் கண்களையும் கலங்க வைத்துவிடுகிறார் மனிதர்.

படத்தின் நாயகி ரெஜிஷா விஜயனை விட தனுஷின் அக்காவாக நடித்திருக்கும் லட்சுமிப்ரியா சந்திரமௌலி மனதில் இடம் பிடிக்கிறார்.

தான் ஆசையாக வளர்த்த தம்பி தடம் மாறிப் போகிறானோ என்ற கவலையில் அவரை அடித்து கேள்வி கேட்கும் ஒரு காட்சியிலேயே நின்று விடுகிறார்.

பக்கத்தில் மகனுக்கு ஆதரவாய் பேசும் அம்மாவைக் கூட ஒரு தட்டு தட்டி விட்டுச் செல்லும் போது தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

படத்தில் சென்டிமென்ட் இல்லையே என்று சொல்பவர்களுக்கு இந்த அக்கா சென்டிமென்ட்டும், படத்தின் ஆரம்பக் காட்சியில் இறந்து போகும் தனுஷின் தங்கை சென்டிமென்ட்டும் நெகிழ வைத்துவிடும்.

மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

முதல் படத்திலேயே சவாலான முத்திரை பதிக்கும் ஒரு கதாபாத்திரம். கிடைத்த அறிமுக வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தனுஷ் மீது தீராத காதலுடன் சுற்றி வருகிறார்.

அவர் பார்க்கும் காதல் பார்வையில் படம் பார்க்கும் ரசிகர்களே சொக்கிப் போய்விடுவார்கள் போலிருக்கிறது. இவர் கதாபாத்திரத்தை காதலுக்காக மட்டுமேதான் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது கொஞ்சம் நெருடல்.

ரெஜிஷாவின் அண்ணனாக யோகி பாபு குணச்சித்திர வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

தனுஷின் அப்பாவாக பூ ராம், அம்மாவாக நடித்திருப்பவர், கல்லூரியில் படிக்க ஆசைப்படும் இளம் பெண்ணாக 96 கௌரி கிஷன், குதிரையை வளர்க்கும் அந்தச் சிறுவன், பக்கத்து ஊர் பெரிய மனுஷனாக சில காட்சிகளில் வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

தன்னையே அவமானப்படுத்தி விட்டார்களே என்ற அகம்பாவத்துடன் இருக்கும் கர்வமான காவல்துறை அதிகாரியாக நட்ராஜ். ஒரு போலீஸ் அதிகாரி நினைத்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை அவரது அதிரடி மூலம் காட்டியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் மற்றொரு கதாபாத்திரம் என்று சொல்லுமளவிற்கு அமைந்துள்ளது.

கண்டா வரச் சொல்லுங்க பாடல் ஒரு சரியான ஆக்ஷன் காட்சியில் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமே, அதை படத்தின் டைட்டில் பாடலாக வைத்துவிட்டார்கள்.

பொடியன்குளம் கிராமம் செட்டை ஒரு நிஜமான கிராமம் போல உருவாக்கியுள்ளார் கலை இயக்குனர் ராமலிங்கம்.

90களின் இறுதி காலகட்டத்தில் நடக்கும் கதை. அந்தக் காலத்து காட்சிகளை அப்படியே தனது ஒளிப்பதிவின் மூலம் யதார்த்தமாய் பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

ஒரு வரியில் சொல்வதென்றால் பொடியன்குளம் கிராமத்தில் பேருந்து நிற்கவில்லை, அதற்காக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை எனச் சொல்லிவிடலாம்.

ஆனால், அதற்கு திரைக்கதை அமைத்து அழுத்தமான காட்சிகளுடன், ஷார்ப்பான வசனங்களுடன் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை அழுத்தம் திருத்தமாய் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

படத்தின் நீளம், மீண்டும் சாதிய மோதல் படம், ரத்தம் தெறிக்கும் வன்முறை ஆகியவை படத்திற்குக் கொஞ்சம் மைனஸ்.