பாகிஸ்தான் உள்ளே சென்று அவர்களை அடித்து நொறுக்கி விட்டு மீண்டும் பத்திரமாக நாம் திரும்பி விடுகிறோம், ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரி ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை என்னதான் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் அப்பாவி பொதுமக்களிடமிருந்து தான் பணத்தை கைப்பற்றுகிறதே தவிர அரசியல்வாதிகளிடம் இருந்து இன்னும் பணம் கைப்பற்றியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’பாகிஸ்தானுக்கு போய் அவர்களுக்கே தெரியாமல் அடித்து வந்து விடக்கூடிய அளவுக்கு நமக்கு திறமை இருக்கிறது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் நிறுத்த முடியவில்லை.
நான் இது குறித்து நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ’யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ, அவர்களது வங்கி கணக்கை முடக்கிவிட வேண்டும், தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு செலவு செய்ய அனுமதி அளித்திருக்கிறதோ, அந்த அளவு பணம் மட்டும் எடுக்க அனுமதிக்க வேண்டும், தேர்தல் முடிந்தவுடன் முடக்கிய வங்கிக்கணக்கை ரிலீஸ் செய்து விடலாம் என்று ஐடியா கொடுத்ததாக ஆரி கூறினார்.
இது நகைச்சுவையாக இருந்தாலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் அரசியல்வாதிகள் எங்கு வேண்டுமென்றாலும் எவ்வளவு பணத்தில் வேணாலும் கொண்டு சென்று விடலாம், ஆனால் சாதாரண அப்பாவி மக்கள் சிறிதளவு பணம் எடுத்துச் சென்றால் கூட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆரி கூறிய இந்த ஐடியாவை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
https://www.instagram.com/reel/C53p9r8yt40/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==