இன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நிமிடமே கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவருடைய கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் விலகி விட்டதாக அறிக்கை வெளியிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாணவர் அணி தலைவராக இருந்த ஷங்கர் ரவி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கட்சியில் தனக்கு பல பிரச்சனைகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரை கட்சியில் இருக்க முடிவு செய்தேன் என்றும் தேர்தல் முடிவு அடைந்ததை அடுத்து நான் விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் உள்ளடி வேலைகள் தனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் அதனால்தான் எனது கட்சிப் பணியை நிறுத்துவது முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு பல ஏமாற்றங்கள் இருந்தாலும் கட்சி தலைமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் என்றும் எனக்கு நடந்த பிரச்சனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கட்சி தலைமைக்காக தொடர்ந்து பணியாற்றினேன் என்றும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் சலிப்படைந்து விட்டதால் இப்போது விலகல் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்று பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனாலும் கட்சிக்கு கடைசி நாள் வரை உண்மையாக உழைத்தேன் என்றும் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் என்னை போன்ற இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என்று நம்புகிறேன் என்றும் மக்கள் நீதி மய்யம் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே தனது கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் விலகியதை அடுத்து இப்படி கை விரிச்சிட்டாங்களே என்று கமல்ஹாசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.