மயில்சாமி நடித்த வெப்சீரிஸ் குறும்படமாக வெளியாகிறது

Published:

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார். அசோகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் எபிசோட் முடிந்த நிலையில் மயில்சாமி மறைந்து விட்டதால் எடுத்த வரை உள்ள காட்சிகளை கொண்டு அதனை குறும்படமாக வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து இயக்குனர் ஏ.ராகுல் கூறியதாவது: இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும். நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார். அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம். என்றார்.

Related articles

Recent articles

spot_img