மாமன்னன் – விமர்சனம்

Published:

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – ஏஆர் ரகுமான்
நடிப்பு – வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின்
வெளியான தேதி – 29 ஜுன் 2023
நேரம் – 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் – 2.5/5

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சாதி கடந்த காதலை மையப்படுத்தியும், ‘கர்ணன்’ படத்தில் சாதி வேறுபாட்டை மையப்படுத்தியும் படமெடுத்த மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் சாதி அரசியலை மையப்படுத்தி இருக்கிறார். காலம் மாற மாற எல்லாமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்பா கை கட்டி நின்றால், மகன் அம்மாதிரி நிற்க மாட்டான் என்பதை அரசியல் கலந்து அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தைச் சேர்ந்த வடிவேலு. அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், அடிமுறை சண்டையைக் கற்றுக் கொடுப்பவர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஊரில் நடந்த ஒரு சாதி மோதலில் அப்பா வடிவேலு செய்தது பிடிக்காமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். அதே சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கும் வேறு சாதியைச் சேர்ந்தவர் பகத் பாசில். அப்பா வடிவேலுவை அவர் நடத்திய விதம் கண்டு பொறுக்காமல் உதயநிதி எதிர்த்துப் பேச பகத் பாசிலுக்கும், உதயநிதிக்கும் கைகலப்பாகிறது. இந்த விவகாரத்தை தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக் கொள்ளும் பகத் கட்சியை விட்டு விலகி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறார். அடுத்து நடக்க உள்ள தேர்தலில் எதிரெதிர் மோதுகிறார்கள். இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் மீதிக் கதை.

அடுத்தவரை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் கொண்ட ஒரு அரசியல் வாரிசுக்கும், அடங்கிப் போக மாட்டேன், எதிர்த்து நிற்பேன் எனத் துடிக்கும் மற்றொரு அரசியல் வாரிசுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் இந்த ‘மாமன்னன்’. சென்டிமென்ட் படமாக, காதல் படமாக இல்லாமல் அரசியல் படமாக மட்டுமே இப்படத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என மாரி செல்வராஜ் நினைத்திருக்கிறார். சேலம் மாவட்ட பின்னணி, கதைக்களம், சில பல குறியீடுகள் என இரண்டு சாதிகளுக்கிடையிலான மோதல் படமாகவும் துருத்திக் கொண்டு தெரிகிறது.

படத்தின் ‘மாமன்னன்’ டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலு தான் இந்தப் படத்தின் கதாநாயகன் என்றால் அது மிகையில்லை. முழு படத்தையும் அவருடைய தோளில், பேச்சில், நடவடிக்கையில் தாங்கி நிற்கிறார். அவருடைய பணிவு, அமைதி, கோபம், பாசம், அரசியல் என ஒவ்வொன்றுமே முந்தைய படங்களின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை எந்த இடத்திலும் ஞாபகப்படுத்தவில்லை. மாமன்னன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் வேறு ஒரு தளத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வடிவேலு. அவருக்குள்ளும் இப்படி ஒரு நடிப்பு ஒளிந்திருக்கிறது என்பதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதிவீரன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின். ஆரம்பம் முதல் இடைவேளை வரை ஒரு இறுக்கமான முகத்துடனேயே நடித்திருக்கிறார். அந்த இறுக்கத்திற்கான காரணம் பிளாஷ்பேக்காக வந்தாலும் அதை நம் மனதில் இன்னும் உருக்கமாய் தைக்கும்படி இயக்குனர் சொல்லியிருக்கலாம். ஒரு பாடலின் மூலம் அந்த உருக்கத்தைக் கடந்ததற்குப் பதில் காட்சிகள் மூலம் நமக்குள் கடத்தியிருக்கலாம். அப்பாவுக்கான மரியாதையைப் பெற்றுத் தரத் துடிக்கும் கதாபாத்திரத்தில் உதயநிதியின் கோபம் ஆங்காங்கே வந்து ஒரு கட்டத்தில் ஆவேசமாய் மாறுகிறது. தன்னுடைய படங்களில் இது ஒரு முக்கியமான படம் என உதயநிதி உறுதியாக சொல்லிக் கொள்ளலாம்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஏழை மாணவர்களுக்காக மேற்படிப்பபுக்காக கோச்சிங் சென்டர் நடத்தும் லீலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். விதவித ஆடைகள், காதல் காட்சிகள் என இன்றைய கதாநாயகிகள் நடிக்க ஆசைப்படும் காலத்தில் இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது கீர்த்தி சுரேஷிடம் இருப்பது எதிர்பாராத ஆச்சரியம்தான். உரிமைக்குக் குரல் கொடுப்பவராக தன் குரலையும் பதிய வைத்துள்ளார் கீர்த்தி.

நாய் ரேஸில் தோற்றுப் போன தான் வளர்த்த நாயையே கொடூரமாகக் கொலை செய்யும் ஆரம்பக் காட்சியிலேயே பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைக்கிறார் இயக்குனர். மாவட்ட அரசியலில் தன்னுடைய சாதியின் ஆதிக்கம், தனது ஆதிக்கம் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்ற குணம். அண்ணனாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அனைவரையும் அடக்கி ஆளத் துடிக்கிறார். முதல்வரை சந்தித்தாலும் தனது பின்னணி என்பதைச் சொல்லிவிட்டு வேறு கட்சியில் சேருகிறார். தன் வீட்டில் தனக்குக் கீழாக நின்றவர் எப்போதுமே நிற்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர். அந்த ஒரு இடைவேளை காட்சியும் அதற்குப் பிறகான காட்சிகளும் பகத் பாசிலின் வில்லத்தனத்தை வரும் காலங்களிலும் பேச வைக்கும்.

ஸ்டைலிஷனான படங்கள், ஹை–பை படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்கள் என்று மட்டுமே பணியாற்றி வந்த ஏஆர் ரகுமான் இம்மாதிரியான படங்களுக்கு இசையமைத்துள்ளதும் ஆச்சரியம்தான். காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை தனது பின்னணி இசையாலும், சிச்சுவேஷன் பாடல்களாலும் இன்னும் அதிகமாக்குகிறார். சேலம் கதைக்களம் தமிழ் சினிமாவில் அதிகம் இடம் பிடிக்காத ஒன்று. அந்த சுற்று வட்டாரங்களை கதையொட்டி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி இவர்களைச் சுற்றி மட்டுமே மொத்த படமும் நகர்கிறது. வசனங்கள் மூலமும் சில காட்சிகள் மூலமும் சில பல அரசியலைக் குறியீடாக வைத்துள்ளார் இயக்குனர். இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் களம் மட்டும்தான் என்பதும், பகத், உதயநிதி இருவரிடையேயான போட்டி என்பதும் தொய்வை ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற காட்சிகளை முன்னரே பல படங்களில் பார்த்துவிட்டதால் சுவாரசியம் குறைகிறது. கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என்பதையும் யூகிக்க முடிகிறது. சாதி அரசியல், மோதல் தான் படமென்பதால் அரசியல் ஆர்வமுள்ளவர்களை இப்படம் அதிகம் ஈர்க்கலாம். திரைப்படமாகப் பார்த்தால், சராசரி, குடும்பத்து ரசிகர்களை ஈர்க்கும்படியான கதை படத்தில் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மாமன்னன் – உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

Related articles

Recent articles

spot_img