சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படி பல பல நட்சத்திரங்களின் மூலம் மாபெரும் எதிர்பார்ப்பை மாவீரன் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் தனது குரல் மூலமாக நடித்துள்ள விஜய் சேதுபதியும் இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள மாவீரன் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கதாநாயகன் சிவகார்த்திகேயன் {சத்யா} ஓவிய கதைகள் எழுதி வருகிறார். இந்த ஓவியத்தில் வரைந்து வரும் கதாபாத்திரம் தான் மாவீரன். அநீதியை எதிர்த்து, போராடி மக்களுக்கு நீதியை வழங்கி, மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுபவன் தான் இந்த மாவீரன்.
இப்படி தனது கதையில் மாவீரனை தைரியமான கதாபாத்திரமாக வடிவமைக்கும் சிவா, தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சனை தனக்கும் தனது குடும்பத்திற்கும் வந்தாலும், அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும் என சொல்லும் நபராக இருக்கிறார். இப்படி இருக்கும் கதாநாயகன் சிவாவை தேடி அரசியல் ரீதியான பிரச்சனை வருகிறது.
இந்த பிரச்சனையில் சிவகார்த்திகேயனுக்கு எமனாக என்ட்ரி கொடுக்கிறார் அமைச்சர் மிஷ்கின் {YM ஜெயக்கொடி}. சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி அவரை சுற்றி இருக்கும் மக்களுக்கும் மிஷ்கினால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த பிரச்சையில் இருந்து தன்னை எப்படி சிவகார்த்திகேயன் பாதுகாத்துக் கொண்டார். மாவீரன் எப்படி சிவகார்த்திகேயனுக்கு உதவினார்? கதையில் வரும் மாவீரன் போல் நிஜ வாழ்க்கையில் மக்களுக்காக போராடினாரா சிவகார்த்திகேயன் என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் மீண்டும் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் நிரூபித்துள்ளார். மாவீரனுக்கு முன் வெளிவந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் மாவீரன் படத்தின் மூலம் அடித்து நொறுக்கியுள்ளார். குறிப்பாக பயந்த சுபாவத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. மேலும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார்.
மாவீரன் குரலாக வரும் விஜய் சேதுபதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு சிறப்பாக உதவியுள்ளார். வில்லன் மிஷ்கின் மிரட்டலான நடிப்பு. ஆனாலும் கூட இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். நடிகை சரிதாவின் அனுபவ நடிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் தனக்கு கொடுத்த ரோலில் நன்றாக நடித்துள்ளார். ஆனால் காட்சிகள் கொஞ்சம் குறைவு தான்.
சுனில் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து விட்டது. மேலும் திரையரங்கில் உள்ள அனைவரையும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையில் மூழ்கடித்து விட்டார் யோகி பாபு. சிவாவின் தங்கையாக நடித்துள்ள மோனிஷா தனக்கு கொடுப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். மற்றபடி அனைவரும் அவரவர் வேலையை திரையில் சரியாக செய்துள்ளனர்.
இயக்குனர் மடோன் அஸ்வின் தனது திரைக்கதையின் மூலம் அசர வைத்துவிட்டார். சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அவை யாவும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அனைவரையும் எளிதில் கவரும் வகையில் மாவீரனை வடிவமைத்த விதம் சிறப்பு. மண்டேலா படத்திற்கு பின் மீண்டும் சிறப்பாக படைப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன், நகைச்சுவை இருந்தாலும், தன்னுடைய அரசியல் சார்ந்த விஷயங்களை அழகாக படத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஒளிப்பதிவு படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. எடிட்டிங் பக்கா. பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே.
நிறை
சிவகார்த்திகேயன் நடிப்பு
விஜய் சேதுபதி குரல், சரிதா, மிஸ்கின்
மடோன் அஸ்வின் திரைக்கதை
ஆக்ஷன் காட்சிகள்
மாவீரன் கதாபாத்திரம்
குறை
சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
மொத்தத்தில் மாவீரன் மக்களுக்கான ஒருவன்..