பேய் படம் என்றால் பயமுறுத்த வேண்டாம், சிரிக்க வைக்கலாம் என ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் சொல்லி வெற்றியும் பெற்றவர் சந்தானம். அந்த பார்முலாவை இந்த மூன்றாம் பாகத்திலும் பாலோ செய்து ரசிக்க வைத்திருக்கிறார். ‘டிடி ரிட்டன்ஸ்’ அதன் மூன்றாம் பாகம்தான் என படத்திலேயே சொல்லிவிட்டார் சந்தானம்.
முந்தைய படங்களில் வழக்கமான சந்தானத்தைப் பார்க்க முடியாமல் போக இந்தப் படத்தில் அவரை மீண்டு(ம்) அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். எந்த அவதூறும் இன்றி தான் மட்டும் நகைச்சுவை செய்யாமல் மற்றவர்களையும் சுவை குன்றாமல் செய்ய வைத்திருக்கிறார் சந்தானம்.
புதுச்சேரியில் ஒயின் ஷாப்களின் ஓனராக இருப்பவர் பெப்ஸி விஜயன். அவரது வீட்டில் பிபின் தலைமையிலான கூட்டம் ஒன்று கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றொரு கூட்டமான மொட்டை ராஜேந்திரனிடம் கைமாறி பின்னர் சந்தானத்திடம் வந்து சேர்கிறது. அந்தப் பணத்தை ஊருக்கு வெளியே ஒரு காட்டு பங்களாவில் மறைத்து வைக்கிறார்கள் சந்தானத்தின் நண்பர்கள்.
அது பற்றி தெரிய வந்த விஜயன், சந்தானத்தின் காதலி சுரபியைக் கடத்தி வைத்து அவரது பணத்தைக் கொண்டு வந்து தரச் சொல்கிறார்கள். அந்த காட்டு பங்களாவிற்குள் செல்லும் சந்தானமும், அவரது நண்பர்களும் அங்குள்ள பேய்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு சூதாட்ட கேமில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியே போக முடியும் என பேய்க் குடும்பத்துத் தலைவன் பிரதீப் ராவத் சொல்ல, சந்தானம் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே காமெடிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது என புரிய வைத்துவிடுகிறார்கள். அதை கடைசியில் கிளைமாக்ஸ் வரை திரைக்கதையில் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். பணத்தைக் கொள்ளையடிப்பதும், அது ஒருவர் மாறி மற்றொருவரிடம் சென்று பேய் பங்களா வரை போவதையும் லாஜிக்காகவே யோசித்திருக்கிறார்கள். அதன்பின் பேய்களின் ஆட்டம் என்பதால் நோ லாஜிக், ஒன்லி காமெடி மேஜிக் தான்.
தோற்றத்திலும், நகைச்சுவையிலும் பழைய பார்முக்கு நன்றாகவே ரிட்டர்ன் ஆகிவிட்டார் சந்தானம். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது. அப்படி நடந்து கொண்டால் டிடி ஆகவோ அல்லது பணமாகவோ அவருக்கு வந்து சேரும் என்பது உறுதி. ஹீரோ என்றால் எப்படியும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிந்தாலும் பேய் பங்களாவில் அவர் ஆடும் அந்த ‘கேம் ஷோ’ தான் படத்தின் ‘ஷோ ஸ்டாப்பர்’.
சந்தானத்திற்கு ஒரு ஜோடி இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகியாக சுரபி. சந்தானம்தான் கதாநாயகன் என்றாலும் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே முக்கியத்துவம் வரும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக மாறன், சேது. இந்தப் படத்திலும் மாறனின் டைமிங் வசனங்கள், டிரெண்டிங் வசனங்களாக அமைந்து ரசிக்க வைக்கிறது.
பிபின் தலைமையில் முனிஷ்காந்த் உள்ளிட்டவர்களின் கொள்ளை கூட்டம், மொட்ட ராஜேந்திரன் தலைமையில் தங்கதுரை உள்ளிட்டவர்களின் மற்றுமொரு கொள்ளை கூட்டம். வில்லன் பெப்ஸி விஜயனின் மகனான ரெடின் கிங்ஸ்லி, அடியாளாக தீனா. இவர்களும் ஆரம்பத்திலிருந்தே ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி, பேய் பங்களாவிற்குள் ஓடியோடி நம்மையும் சிரிக்க வைக்கிறார்கள்.
பேய் பங்களாவில் சூதாட்ட கேம் ஷோ நடத்தும் பிரதீப் ராவத், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மசூம் சங்கர், மானஸ்வி ஆகியோரும் பேய்களாக மிரட்டியுள்ளார்கள்.
புதுச்சேரியின் தெருக்கள், அந்த பேய் பங்களா என ஒளிப்பதிவாளர் தீப் குமார் பதி கதாபாத்திரங்களுடன் ஓடியாடி ஒளிப்திவு செய்திருக்கிறார். ஆப்ரோ இசையில் பின்னணி இசை பக்கபலமாய் அமைந்துள்ளது.
பேய் பங்களாவின் விஎப்எக்ஸ் காட்சிகளை இன்னும் தரமாக அமைத்திருக்கலாம். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளின் நீளத்தைச் சிறிது குறைத்திருக்கலாம். மற்றபடி நேரம் கடந்து போவதே தெரியவில்லை.
டிடி ரிட்டன்ஸ் – திருப்பித் தரும்… துட்டு.. துட்டு..