துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார் துல்கர் சல்மான். அந்தவகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக துல்கரின் நண்பர்களான ராணா மற்றும் நானி ஆகிய இளம் நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் துல்கர் சல்மானின் பொறுமையையும் அமைதியையும் குறித்து பாராட்டும் விதமாக ராணா பேசும்போது, அவர் தன்னை அறியாமல் போகிற போக்கில் பாலிவுட் நடிகை சோனம் கபூரை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டது. .
அந்த நிகழ்வில் ராணா பேசும்போது, “துல்கர் சல்மானும், நானும் ஒரே நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள். அவர் என்னுடைய ஜூனியர். ஒருமுறை எனது வீட்டின் அருகே துல்கர் சல்மான் நடித்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கே துல்கர் சல்மான் ஒரு ஓரமாக நின்று புரடக்சன் பையனுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை லண்டனில் தனது கணவருடன் ஷாப்பிங் செய்த விஷயத்தை செல்போனில் சத்தமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதனால் அப்போது படமாக்கப்பட்ட காட்சிகளில் அவரால் முழு ஈடுபாட்டையும் செலுத்த முடியாததால் ஒரு முழுமையான தரத்துடன் காட்சிகளை படமாக்க முடியவில்லை. ஆனாலும் துல்கர் சல்மான் இந்த சூழலை அமைதியாக எதிர்கொண்டு தனது டென்ஷனையும் குறைத்துக்கொண்டு மிக பொறுமையாக இருந்தார். துல்கர் என்றாலே எங்களுக்கு அவர் அப்படித்தான்” என்று பேசினார்.
ராணாவின் இந்த பேச்சு குறித்த வீடியோக்களும் செய்திகளும் வெளியான உடனே ராணா குறிப்பிட்டு பேசிய நடிகை, துல்கர் சல்மான் இந்தியில் நடித்த சோயா பேக்டர் என்கிற படத்தில் அவருடன் நடித்த சோனம் கபூர் பற்றி தான் என பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட ஆரம்பித்தனர்.
இது பின்னர் ராணாவின் கவனத்திற்கு வந்ததும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தான் சோனம் கபூர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அப்படி சொன்னதாக யாரும் நினைத்தால் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.