கடந்த 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹே ராம்’. இதில் ஷாரூக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் அதிக பேசப்படும் படமாக ஹே ராம் இருந்து வருகிறது. இந்தக்காலக்கட்டத்தில் இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என பல கூறி வந்தனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் இந்த படத்தின் முழு தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். படம் வெளியான 22 மணிநேரத்தில் 2.21 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.
‛‛இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படத்திற்கென்று ஒரு இடம் எப்போதும் இருக்கும். இந்திய சினிமாவின் ஆக சிறந்த படைப்பு ஹேராம்… கமல் 200 வருஷம் வாழ்வான் வாலி சொன்னது. ஹே ராம் படம் 200 வருஷம் அல்ல இன்னும் ஆயிரம் வருடம் கமல் சார் வாழ்வார்” என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.