ரெட் சில்லீஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் ஜவான். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 4 வருடங்களாக உருவான இப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.
அதற்கு முதல் காரணம் ஷாருக்கான் மற்றும் அட்லி கூட்டணி தான். இதுவரை விஜய்யை வைத்து மாஸ் காட்டிய அட்லீ, முதல் முறையாக ஷாருக்கானை வைத்து எப்படி இயக்கியுள்ளார், அதுவும் ஹிந்தியில் தமிழ் இயக்குனர் அட்லியின் கைவசத்தில் உருவான இப்படம் எப்படி இருக்கும் என திரையில் பார்க்க ஆவலுடன், பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை ஜவான் பூர்த்தி செய்ததா இல்லையா வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
பெண் கைதிகளின் ஜெயிலராக இருக்கும் ஷாருக்கான் [ஆசாத்] தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கும் 6 பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளை ஒலிக்கும் விதமாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்.
இதில் தன்னுடைய ஆசாத் என்ற பெயரை மறைத்து ’விக்ரம் ரத்தோர்’ என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்க்கிறார். ஷாருக்கான் மற்றும் இந்த 6 பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லன் விஜய் சேதுபதி [காளி].
வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே உள்ள பகை என்ன? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் மற்றும் 6 பெண்களும் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
பாலிவுட் கிங் கான் ஷாருக்கானின் நடிப்பு படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து விட்டார். மேலும் எமோஷனல் காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார்.
அவருக்கு எந்த வகையிலும் குறை வைக்காத அளவுக்கு வில்லத்தனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. நயன்தாராவின் பங்கு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஹீரோயின் என்றால் ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் காட்சிகளில் மட்டுமே கமர்ஷியல் திரைப்படங்களில் பயன்படுத்தப் படுவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், ஜவானில் ஷாருக்கானுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.
தீபிகா படுகோன் கேமியோ என்பது எதிர்பார்த்தது தான், ஆனால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத் கேமியோ தீபிகாவை மிஞ்சிவிட்டது. பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, லெகர் கான் மற்றும் ஷாருக்கான் குரூப்பில் இருந்த மற்ற பெண்களின் நடிப்பும் பக்கா.
படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரங்களில் யோகி பாபுவும் ஒருவர். ஆனால், யோகிபாபுவிற்கு சுத்தமாக ஸ்கோப் இல்லை. எதோ பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்தியது போல் இருந்தது.
இயக்குனர் அட்லீ மீண்டும் தன்னுடைய வழக்கமான ரிவெஞ்ச் திரைக்கதையை தான் இப்படத்திலும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டி கைதட்டல்களை அள்ளியுள்ளார். மாஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து விஷயங்களையும் அட்லீக்கு உரித்தான பாணியில் தான் படம் இருக்கிறது. முதல் பாதி திரைக்கதை செம மாஸ்.
இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக இருந்து இருக்கலாம். படத்தின் நீளத்தை இன்னும் கூட குறைத்திருந்தால் தொய்வு இல்லாமல் இருந்திருக்கும். சுத்தமாக லாஜிக் எங்குமே இல்லை. அறிமுக பாடலை தவிர்த்து மற்ற அனைத்து பாடல்களும் சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மெர்சல் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் இருந்தது.
ஆனால், டெக்கனிகள் விஷயங்களில் பட்டையை கிளப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமையாக இருந்தது. அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் ரூபனை தான் பாராட்ட வேண்டும்.
மேலும் அட்லீ சொல்ல வந்த விஷயங்கள் பாராட்டுக்குரியது. குறிப்பாக அரசியல் குறித்து பேசியது நன்றாக இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் ஷாருக்கான் ஒரு பக்கம் சண்டை போட்டால் தன்னுடைய பின்னணி இசையின் மூலம் மற்றொரு பக்கம் மாஸ் காட்டிவிட்டார் அனிருத்.
பிளஸ் பாயிண்ட்
ஷாருக்கான் நடிப்பு
விஜய் சேதுபதி, நயன்தாரா
அனல் அரசின் ஆக்ஷன் காட்சிகள்
முதல் பாதி
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்
மைனஸ் பாயிண்ட்
படத்தின் நீளம்
லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் ஜவான் அட்லீயின் தரமான கமர்ஷியல் சம்பவம்