லியோ – விமர்சனம்

Published:

தயாரிப்பு – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
நடிப்பு – விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்
வெளியான தேதி – 19 அக்டோபர் 2023
நேரம் – 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் – 3/5

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அவர்களது நிஜ வயதுக்குரிய கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க மாட்டார்கள். ஐம்பது வயதைக் கடந்த ஹீரோவாக இருந்தாலும் கல்லூரிக்குப் போகும் ஹீரோயினைக் காதலித்த பல படங்களைப் பார்த்திருக்கிறோம். முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த சில படங்களாக அவருடைய வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதைத் தற்போது விஜய்யும் தொடர்வது பாராட்டுக்குரியது. ஒரு டூயட் பாடல் இல்லாமல், ஒரு ஹீரோ அறிமுகப் பாடல் இல்லாமல் விஜய் படத்தைப் பார்ப்பது நிச்சயமாக வித்தியாசமாக உள்ளது. இதை, இனி வரும் காலங்களிலும் விஜய் தொடர்ந்தால் அவருக்கும் நல்லது.

தனது முந்தைய படங்களில் போதைப் பொருட்களை மையப்படுத்திய கதையாகக் கொடுப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வழக்கமாக இருந்தது. இந்தப் படத்திலும் அப்படித்தான் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்தால் அதை ஒரே ஒரு காட்சியுடன் நிறுத்திவிட்டார். ஒரு பேமிலி சென்டிமென்ட் தான் முழு படமும், இப்படிப்பட்ட ஒரு படத்தின் டிரைலரில் அப்படியான ஒரு ‘கெட்ட’ வார்த்தையை எதற்காக வைத்தார் என படம் பார்க்கும் போது யோசிக்க வைக்கிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் தியோக் என்ற இடத்தில் ஒரு காபி ஷாப் நடத்தி வருகிறார் விஜய். மனைவி த்ரிஷா, மகன் மேத்யு தாமஸ், ஒரு மகள் என அன்பான குடும்பம். அவருடைய ஷாப்பிற்கு வந்து தகராறு செய்யும் சிலரைக் கொல்கிறார். சீக்கிரமே விடுதலையாகி வரும் விஜய்யைத் அவரைத் தேடி சிலர் வந்து மீண்டும் பிரச்சினை செய்கிறார்கள். சஞ்சய் தத்தும் விஜய்யைத் தேடி வந்து அவரைத் தன் மகன் ‘லியோ’ என்கிறார். ஆனால், விஜய் தன்னுடைய பெயர் பார்த்திபன் என அமைதியாகப் பேசி அனுப்புகிறார். கணவர் விஜய் மீது சந்தேகப்படும் த்ரிஷாவும் அவர் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். பார்த்திபன் யார், லியோ யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கொஞ்சம் நரைத்த தாடி, மீசை என நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் விஜய். அப்படியிருந்தால் அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாது என்பதற்காக பிளாஷ்பேக்கில் ஒரு இளமையான அதிரடியான வில்லத்தனமான விஜய்யைக் காட்டி சரி செய்திருக்கிறார்கள். விஜய் படம் என்றாலே ஆக்ஷனுக்குக் குறைவிருக்காது, இந்தப் படத்திலும் அப்படியே. அதோடு சென்டிமென்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். தன்னை ஏன் லியோ, லியோ எனத் தேடி வருகிறார்கள் என த்ரிஷாவிடம் அழும் காட்சியில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

இப்படி ஒரு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா சம்மதித்திருப்பது ஆச்சரியம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி என்பதனால் நடிக்க சம்மதித்திருப்பார் போலிருக்கிறது. இருந்தாலும் அந்த முத்தக் காட்சிகள் எல்லாம் ஓவர்.

படத்தின் இரண்டு முக்கிய வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன். இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் அவர்களது கதாபாத்திரம் வருகிறது. இருப்பினும் அர்ஜுனை விட சஞ்சய் தத் அழுத்தமாக நடித்திருக்கிறார். மிஷ்கின், சாண்டி கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலேயே வரும் தேவையற்ற கதாபாத்திரங்கள். விஜய்யின் குடும்ப நண்பராக பாரஸ்ட் ஆபீசராக கவுதம் மேனன், அவரது மனைவியாக பிரியா ஆனந்த்.

அனிருத் இசையில் ‘நா ரெடிதான்’ பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் விஜய்க்குப் பிறகு வேறு யாருக்காவது அதிக சம்பளம் தர வேண்டும் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவுக்குக் கொடுக்கலாம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம்.

படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களைத் தவறாமல் பாருங்கள் என்றார் இயக்குனர் லோகேஷ். அந்த பத்து நிமிடங்கள் மட்டுமல்ல முதல் அரை மணி நேரக் கதையைத் தூக்கிவிட்டால் கூட படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அந்த ‘ஹைனா’வைப் பிடிக்கும் காட்சி, மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா ‘டெம்ப்ளேட்’தான். ஆனால், மூடநம்பிக்கைக்காக தனது மகளையே கொலை செய்யத் துடிக்கும் அப்பா கதாபாத்திரத்தை என்னவென்று சொல்வது ?. இடைவேளைக்குப் பின் இருக்கும் திரைக்கதைதான் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்துடன் ஒப்பிடும் போது இதில் ‘ஸ்கிரிப்ட்’ன் வேகம், அழுத்தம் குறைவே.

லியோ – கொஞ்சம் யோ யோ, கொஞ்சம் யோவ்…

Related articles

Recent articles

spot_img