பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது ‘என்ட் கார்டு’ போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு பேய்ப் படம்தான் இந்த ‘கார்டியன்’.
இன்டீரியர் டிசைனிங் வேலைக்காக சென்னைக்கு வருகிறார் ஹன்சிகா. சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர். இன்டர்வியூவில் சரியாக பதில் சொல்லவில்லை என்றாலும் வேலை கிடைக்கிறது, அடுத்தடுத்து அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன்பின் தனக்குள் இருக்கும் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கெல்லாம் காரணம் எனத் தெரிகிறது. அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் எனக் கூற அதற்கு ஹன்சிகாவும் சம்மதிக்க அடுத்து என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
முதன்மைக் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ள படம். அழகான ஹன்சிகாவை இடைவேளை வரை காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பின் ஆக்ரோஷ ஹன்சிகாவைக் காட்டியுள்ளார்கள் இயக்குனர்கள். அதிர்ஷ்டமில்லாத தன்னைப் பற்றி கவலைப்படுபவருக்கு, திடீரென நினைத்ததெல்லாம் நடப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. அதற்கான காரணம் தெரிய வந்ததும் பெருந்தன்மையாக ஆவியை தனக்குள் இருக்க சம்மதிக்கிறார். அந்த ஆவியின் நிறைவேறாத முக்கிய ஆசை ஒன்றையும் நிறைவேற்றுகிறார்.
படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக ஒருவர் இருக்க வேண்டும் என அவருடைய காதலராக பிரதீப் ராயன் நடித்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.
90ஸ் காலத்து வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் நடித்திருக்கிறார்கள். ஹன்சிகா உடலுக்குள் புகுந்த ஆவி இவர்களைத்தான் பழி வாங்கத் துடிக்கிறது. அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக்.
நகைச்சுவை என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என்னமோ செய்கிறார்கள், ஆனால், சிரிப்புதான் வரவேயில்லை.
சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வழக்கம் போல சில காட்சிகளில் பொருத்தமாகவும், சில காட்சிகளில் சத்தமாகவும் உள்ளது.
படத்தின் இடைவேளை வரை ஹன்சிகாவின் அதிர்ஷ்டம் பற்றிய காட்சிகளாக அப்படியே கடந்து போகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். மிரள வைக்கும் பேய்ப் படமாக இல்லாமல் மிதமான பேய்ப் படமாகக் கடந்து போகிறது ‘கார்டியன்’.
கார்டியன் – பேய் காப்பாற்றுமா ?