ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ் திரை உலகினர் ஏக்கத்துடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது என்பதும், அதனை அடுத்து வெளியான ’பிரேமலு’ ‘ஆடுஜீவிதம்’ ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஆவேஷம்’ என்ற திரைப்படம் 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்லூரியில் புதிதாக சேர்ந்த மூன்று மாணவர்கள், சீனியர் மாணவர்களால் ராக்கிங் செய்யப்படுகிறார்கள். இதனால் அவர்கள் லோக்கல் ரவுடியான பகத் பாசிலிடம் பழகி அவருடைய அன்பை பெறுகிறார்கள். ரவுடி பகத் பாசில் மூலம் தங்களை ராக்கிங் செய்த சீனியர்களை பழிவாங்க நினைக்கும் நிலையில் இதனால் மாணவர்களின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
மிகவும் ஜாலியாக காமெடியாக இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ’ஆவேஷம்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள படங்கள் அடுத்தடுத்து 50 கோடி, 100 கோடி, 200 கோடி ரூபாய் என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரைப்படங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய வெற்றியை இந்த ஆண்டு பெறவில்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும்