சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் – வித்யா பாலன்

Published:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும வித்யாபாலன். தற்போது ‛தோ அவுர் தோ பியார்’ என்ற காதல் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரதீக் காந்தி, இலியானா ஆகியோரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக உள்ள வித்யாபாலன் அளித்த பேட்டி :

* இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்?
படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து ஆக்ஷன் வகைப் படங்களில் நடித்து அலுத்துப் போனதால் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த கதை ரொமான்டிக் காமெடி கலந்தது. இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

* படத்தில் பிரதீக் காந்தி மற்றும் இலியானா உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பிரதீக் காந்தி ஒரு அற்புதமான நடிகர், அவருடன் பணிபுரிந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் அவரது ஸ்கேம் 1992 தொடரைப் பார்த்தேன், அந்தத் தொடரில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. இலியானாவுடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது நன்றாக இருந்தது. தற்போது தாயாகி தனது தாய்மையை அனுபவித்து வருகிறார்.

* சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் இமேஜை மாற்றிய பெருமை உங்களுக்கு உண்டு. இதுபற்றி?
மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான கிரெடிட் எனக்கு மட்டும் தரக்கூடாது. ஏனென்றால் நான் நடித்த படங்களில் யாரோ கதை எழுதி அந்த படங்களையும் யாரோ தயாரித்திருக்கிறார்கள். நான் ‛‛இஷ்கியான், பா, டர்ட்டி பிக்சர், கஹானி மற்றும் நோ ஒன் கில்ட் ஜெசிகா” போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்துள்ளேன் என்று தான் சொல்வேன்.

* என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
காமெடி படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதற்கு முன் பல படங்களில் காமெடி செய்துள்ளேன். கோல்மால் போன்ற நகைச்சுவை படங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை இருக்கும். அதுபோன்று நடிக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img