அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, மக்களுக்கு நல்லது செய்யுங்கள், நீங்கள் மக்களுக்கு நல்லது செய்தால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வர போகிறோம், 2026 ஆம் ஆண்டு என்னை அரசியலுக்கு வரவிடாமல் மக்களுக்கு நல்லது செய்து நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘ரத்னம்’ பட புரொமோஷன் விழாவில் நடிகர் விஷால் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது உறுதி, திரும்பத் திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய செய்ய கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவேன்.
மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமாம், ஆனால் எம்பி எம்எல்ஏவுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவார்களாம், மக்கள் வரி செலுத்துகிறார்கள், அந்த வரிப்பணத்தில் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்கள், மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? இது என்ன கொடுமை? இங்கே நிறைய பிரச்சனைகள் உண்டு மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் 2026ல் அரசியலுக்கு வருகிறேன் என்று விஷால் கூறினார்.
தேர்தல் நாளில் ஓட்டு போட சைக்கிளில் சென்றது குறித்த கேள்விக்கு ’என்னிடம் வண்டி இல்லை, அப்பா அம்மாவிடம் தான் வண்டி உள்ளது, என்னுடைய வண்டியை நான் விற்றுவிட்டேன், இன்றைக்கு இருக்கும் சாலை கண்டிஷனை பார்த்தால் பராமரிப்புக்கு செலவே அதிகமாகிறது, அந்த அளவுக்கு என்னிடம் காசு இல்லை, அதனால் தான் சைக்கிள் வாங்கி, டிராபிக் இல்லாமல் சென்று விடலாம் என்பதற்காக சென்றேன், இது விஜய்யின் இன்ஸ்பிரஷன் என்று சொல்ல முடியாது என்று கூறினார்.