இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன்

Published:

இசையமைப்பாளர் இளையராஜா பேரன் யத்தீஸ்வர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். திருவண்ணாமலையில் இன்று(ஜுன் 8) காலை நடந்த நிகழ்ச்சியில் ஓம் நமச்சிவாய என தொடங்கும் பக்தி ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் மூத்த மகன் தான் யத்தீஸ்வர். இளையராஜா அடிக்கடி செல்லும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திலேயே தனது முதல் பாடலை அவர் பேரன் வெளியிட்டு இருக்கிறார். ரமண ஆசிரம நிர்வாகிகளே இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

யத்தீஸ்வர் கூறுகையில், ‛‛எனக்கு சின்ன வயது முதலே இசை மீது ஆர்வம். முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த பாடல் குறித்து சில ஆலோசனைகளை தாத்தா இளையராஜாவிடம் கேட்டேன். அவரும் ஆர்வமாக வழங்கினார். அப்பா கார்த்திக்ராஜா பாடல் வரிகளில் உதவினார். எனக்கும் தாத்தா, அப்பா, குடும்பத்தினர் பலர் வரிசையில் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இளையராஜா குடும்பத்தில் கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. மறைந்த பவதாரணியும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் வரிசையில் யத்தீஸ்வரும் இணைந்துள்ளார்.

மகன் குறித்து பேசிய கார்த்திக்ராஜா, ”திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பக்தி பாடல்களை கேட்ட யத்தீஸ்வர் அப்படியொரு பாடல் உருவாக்க ஆசைப்பட்டார். அந்த அடிப்படையில் இந்த பாடலை தந்து இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் இருந்து அவர் இசையமைப்பாளர் ஆனது சந்தோஷம், பெருமை. ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இங்கே மக்கள்தான் நீதிபதி. இந்த பாடலை கேட்டு விட்டு அவரை வாழ்த்த வேண்டும்” என்றார்.

Related articles

Recent articles

spot_img