9.1 C
New York

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

Published:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த ‘எந்திரன்’ படத்தையே ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ என இன்றைய அப்டேட் செய்து கதாபாத்திரங்களை மாற்றி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா. அதற்கு நன்றி சொல்லத்தான் படத்திலேயே இயக்குனர் ஷங்கர் பெயரை சேர்த்திருப்பாரோ ?.

எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும், ‘காதல்’ என்பதை மட்டும் நமது இயக்குனர்கள் மறக்க மாட்டார்கள். எதையும் காதலுக்குள் கொண்டு வந்து கனெக்ட் செய்துவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆராய்ச்சியாளரான ஷரா, ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ முறையில் ஒரு பெண்ணை வடிவமைத்து அதை ஒரு மொபைல் போனுடன் கனெக்ட் செய்கிறார். உருவம் இருந்தாலும் உடல் இல்லாத அந்தப் பெண்ணாக மேகா ஆகாஷ். ஷராவிடம் இருந்து அந்த போன் திருட்டுப் போய்விட, அந்த போனை வாங்குகிறார் சிவா. போனுக்குள் இருக்கும் மேகா பற்றி அவருக்குத் தெரிய வருகிறது. மேகாவின் உதவியால் உணவு டெலிவரி செய்து வந்த சிவா, வசதியானவராக மாறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சிவாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் மேகா. ஆனால், சிவாவுக்கு அஞ்சு குரியன் மீது காதல். சிவா தன்னை உதாசீனப்படுத்தவதால் அவரைப் பழி வாங்க நினைக்கிறார். அது என்ன, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘எந்திரன்’ படத்தில் ரோபோ மனிதனாக வந்த ரஜினிகாந்த், இந்தப் படத்தில் ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ பெண் ‘ஸ்மார்ட்போன்’ சிம்ரன் ஆக மாற்றப்பட்டிருக்கிறார். ‘எந்திரன்’ பெரிய பட்ஜெட் படம், பெரிய அளவில் மிரட்டினார் ரோபோ. இது சிறிய பட்ஜெட் படம் அதனால், சிம்ரன் சின்னச் சின்னதாக மட்டும் மிரட்டுகிறார்.

சிவா நடிக்கும் படங்களில் ஒரு வரி, ஒரு வார்த்தை நகைச்சுவை அதிகமாக இருந்து சிரிக்க வைக்கும். இதிலும் அவ்வப்போது அப்படிப் பேசி சிரிக்க வைக்கிறார். ஆனால், இன்னும் அதிகமாக இறங்கி விளையாடக் கூடிய களம்தான். இயக்குனர் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

படத்தின் முதன்மைக் கதாநாயகி என ‘ஸ்மார்ட்போன் சிம்ரன்’ ஆக நடித்திருக்கும் மேகா ஆகாஷைத்தான் சொல்ல வேண்டும். வெறும் ‘க்ரீன்மேட்’ ஷுட்டிங்கில் மட்டுமே அவர் நடித்திருக்க வேண்டும். இருந்தாலும் காதல் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார். சிவாவின் காதலியாக அஞ்சு குரியன், அதிக வேலை இல்லை என்றாலும் அவ்வப்போது அழகாய் வந்து போகிறார்.

சிவாவின் அப்பாவாக பாடகர் மனோ, நண்பனாக மகாபா ஆனந்த். ஆராய்ச்சியாளராக ஷரா, அவருடைய திட்டத்திற்கு பைனான்ஸ் செய்பவராக பக்ஸ்.

இடைவேளை வரை படம் போரடிக்காமல் சுவாரசியமாக நகர்கிறது. அதற்குப் பிறகு மேகா ஆகாஷ் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால், போன்கால்களை பிளாக் செய்வது, மெசேஜ்களை மாற்றி மாற்றி அனுப்புவது என்று மட்டும் விளையாடியிருக்கிறார். பட்ஜெட் பிரச்சினையால் இப்படி சுமாராக யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.

இன்றைய டிரெண்டிங் கதையை யோசித்தவர்கள், திரைக்கதையில் அப்டேட் செய்து கொண்டிருக்கலாம்.

இசை, ஒளிப்பதிவு எல்லாம் சுமார் ரகம்தான். கூடுதலாக பணத்தை செலவழித்து இன்னும் பிரம்மாண்டமாக எடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கலாம்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – போன் புதுசு, மேட்டர் பழசு

Related articles

Recent articles

spot_img