ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தையும், பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தையும் கலந்து செய்தால் வருவதுதான் ‘பஹிரா’ கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே பெண்களால் காதலில் ஏமாந்து போனதாக சொல்லப்படும் சில யு டியுப் வீடியோக்களைக் காட்டி, காதலில் பெண்கள் மோசமானவர்கள் என பெண்களை மட்டம் தட்டும் விதத்தில் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.
போதாக்குறைக்கு படம் முழுவதும் பெண்கள் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதிலேயே இயக்குனர் கவனமாக இருந்திருக்கிறார். “பெண்களுக்கு ஒண்ணுன்னா வேறு எந்த பெண்ணும் வர மாட்டா, ஆனால், ஆண்களுக்கு ஒண்ணுன்னா இந்த பஹிரா” என வருவான் என வசனத்திலும் பெண்கள் மீதான தாக்குதல்தான் அதிகம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற மட்டரகமான காதல் படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்.
இது போன்ற கதைகளை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் ரொம்பவே பாவம். இந்தப் படமெல்லாம் எப்படி ஓடும் என எதிர்பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம். நேற்று நாம் படத்தைப் பார்த்த போது 200 பேர் அமரக் கூடிய தியேட்டரில் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர். ஏற்கனவே, தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. இப்படியெல்லாம் படமெடுத்தால் பயந்து போய் தியேட்டர் பக்கம் மக்கள் வரவே மாட்டார்கள்.
பிரபுதேவா விதவிதமான கெட்டப்புகளில், சில பல பெண்களை ‘டெடி பியர்’ பொம்மையை வைத்து கொலை செய்கிறார். அடுத்தடுத்த கொலைகளால் காவல் துறை திண்டாடுகிறது. பிரபுதேவா ஏன் இப்படி கொலைகளை செய்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பிரபுதேவா விதவிதமான தோற்றங்களில் வருகிறார். பள்ளிகளில் நடக்கும் மாறுவேடப் போட்டிகளில் கூட இந்தக் காலத்தில் சிறப்பான மேக்கப் செய்கிறார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு அந்த அளவில் கூட பிரபுதேவாவிற்கு மேக்கப் செய்யவில்லை. ஏதோ கடமைக்கு படம் எடுத்தால் போதும் என இயக்குனர் எடுத்திருப்பார் போலிருக்கிறது. கடைசி சில காட்சிகளில் மட்டும் பிரபுதேவா நடிக்க முயற்சித்திருக்கிறார்.
படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால் என சில பல ஹீரோயின்கள். இவர்களில் அமைராவிற்கு மட்டும் ஐந்து நிமிடத்திற்கும் மேலான காட்சிகள். மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவான காட்சிகள். நாசர், சாய்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் படத்தில் உண்டு.
80களிலேயே இந்த மாதிரியான ரிவஞ்ச் கதைகளை மூட்டை கட்டி, பரண் மீது தூக்கி போட்டுவிட்டார்கள் இயக்குனர்கள். டிவியில் அடுத்தடுத்து ‘அந்நியன், சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டு படத்தையும் இயக்குனர் பார்த்ததும் இரண்டையும் கலந்து இப்படி ஒரு படம் எடுக்க யோசனை வந்திருக்கும். இவர் இயக்கத்தில் அடுத்து விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்ற ஒரு படம் வரப் போகிறது. அதை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
பஹிரா – ரசிகர்கள் பாவம்ரா….