தமிழகத்தில் ஒரு கிராமத்துக் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தப் படம். 2017ல் வெளிவந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள படம். அந்தப் படத்தில் ஒரு விபத்து மரணத்தால் நடக்கும் பிரச்சினைகளைச் சுற்றி திரைக்கதை நகரும். இந்தப் படத்தில் ஒரு கொலையால் நடக்கும் பிரச்சினைகளைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. முதல் படத்தைப் போலவே இந்தப் படத்தையும் கிராமத்துப் பின்னணியில் யதார்த்த கதாபாத்திரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள சங்குப்பட்டி என்ற கிராமத்து காவல் நிலைய எல்லையில் ஒரு கொலை நடக்கிறது. கொலை நடந்த இடம் வழியாகச் சென்ற கொலையானவரின் கழுத்தில் கிடந்த செயின், அவரது செல்போன் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார் பிரேம்ஜி. ஆனால், அவரை சந்தேகத்தின் பேரில் அங்கேயே உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். கொலையாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆகிறார்கள். இருந்தாலும் கொல்லப்பட்டவரின் கழுத்தில் கிடந்த அத்தனை நகைகளையும் எடுத்தது யார் என்ற விசாரணைதான் நடக்கிறது. அந்த நகைகளுக்காக சங்குப்பட்டி காவல் நிலையத்தினரும், பக்கத்து ஊர் காவல் நிலையத்தினரும் சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். நகைகளை எடுத்தது யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு கிராமத்துக் காவல் நிலையம், ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார், ஒரு பெண் போலீஸ், ஒரு இன்பார்மர், கொலையாளிகள், சந்தேகத்தில் கைதானவர், ஒரு பாட்டி ஆகியோரைச் சுற்றியே முழு திரைக்கதையும் நகர்கிறது. அந்த விசாரணையில் நடக்கும் விஷயங்களை நகைச்சுவை கலந்து, நாட்டு நடப்புக்களை கொஞ்சம் கிண்டலடித்து படத்தை கலகலப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இரண்டு மணி நேரமும் போரடிக்காமல் சென்றாலும் இதைவிட இன்னும் கூட சிறப்பாகக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.
படத்தின் கதாநாயகர்கள் என இரண்டு போலீசாரை மட்டும்தான் சொல்ல வேண்டும். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சவுண்டு சர்வீஸ் கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்த சித்தன் மோகன் அதில் ஒருவர், மற்றொருவர் செல்வமுருகன். கிராமத்துக் காவல் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் இப்படித்தான் இருப்பார்கள் என்று இருவரும் அவர்களது நடிப்பால் நம்ப வைக்கிறார்கள். இருவரது சின்னச் சின்ன ‘டைமிங்’ வசனங்கள் அவ்வப்போது கைதட்டி ரசிக்கவும் வைக்கின்றன.
படத்தின் கதாநாயகி என்றால் அந்த பாட்டி தான். நிறைய படங்களில் அந்தப் பாட்டியைப் பார்த்திருக்கிறோம். அந்த லட்சுமி பாட்டியின் நக்கலும், நையாண்டித்தனமும், யதார்த்தமான பேச்சும் ரசிகர்களை நிச்சயம் கவரும். பாட்டிக்கு அடுத்து நீதிபதியாக நடித்திருக்கும் ஞானசம்பந்தம் பற்றி சொல்ல வேண்டும். போலீசார் ஒரு வழக்கை எப்படியெல்லாம் விசாரிக்கிறார்கள், யாரைக் கைது செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.
அப்பாவி போல தெரிந்தாலும் போலீசாரையே கொஞ்சம் கதிகலங்க வைக்கிறார் பிரேம்ஜி. போலீசார் எப்படிப்பட்டவர்கள் என அவர் பேசும் ஒரு வசனம் காவல்துறைக்குக் களங்கம். அவரது காதலியாக ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார் ஸ்வயம் சித்தா.
தீபன் சக்ரவர்த்தி பின்னணி இசை, ஆர்வி சரண் ஒளிப்பதிவு, வெங்கட் ராஜனின் படத் தொகுப்பு இயக்குனரின் யதார்த்தப் பதிவுக்குக் கை கொடுத்துள்ளது.
கதை என்று பார்த்தால் ஒரு அழுத்தமில்லாத கதை, ஆனால் திரைக்கதையில், வசனங்களில் ரசிர்களை ஈர்க்க முடியும் என அதில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. ஒரு ஹீரோவுக்காக மட்டுமே கதையமைத்து படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் தன்னுடைய கதைக்காக நடிகர்களைத் தேர்வு செய்து இப்படியும் கூட படத்தைக் கொடுக்கலாம் என்ற அவரது நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.
சத்திய சோதனை – சத்துடன்…