மார்க் ஆண்டனி திரைவிமர்சனம்

Published:

வினோத் குமார் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தின் First லுக் போஸ்டரில் இருந்து பாடல்கள் வரை அனைத்துமே ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில், படத்தின் மீது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், மார்க் ஆண்டனி டிரைலர் தான் படத்தின் மீதுள்ள ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் இமாலய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை மார்க் ஆண்டனி முழுமையாக பூர்த்தி செய்ததா? விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் Phone மூலம் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி [செல்வராகவன்]. இந்த டைம் டிராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார்.

அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் Phone மார்க் [ மகன் விஷால்] இடம் கிடைக்க, இதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது? இதில் வில்லன் ஜாக்கி பாண்டியனின் [ எஸ். ஜே. சூர்யா] பங்கு என்ன என்பது தான் படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விஷால் அப்பா மற்றும் மகன் இரு கதாபாத்திரத்திலும் நன்றாக நடித்துள்ளார். குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை. வில்லனாக வரும் எஸ்.ஜே. சூர்யா எப்படி தான் இப்படி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் ரசிக்கும்படி நடிக்கிறாரோ என்று தெரியவில்லை.

பல படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் வில்லத்தனத்தில் நகைச்சுவையையும் கலந்து பட்டையை கிளப்பியுள்ளார். சுனில் ஏற்று நடித்த ஏகாம்பரம் கதாபாத்திரம் பக்கா. அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் அனைவரின் நடிப்பும் ஓகே.

தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்கு பாராட்டு. இயக்குனராக இதற்கு முன் இவர் இயக்கிய படங்களால் இவர் மீது இருந்த பார்வை, மார்க் ஆண்டனி படத்திற்கு பின் முற்றிலும் மாறக்கூடும். முதல் பாதியின் துவக்கத்தில் ஒரு 30 நிமிடங்கள் தொய்வு இருந்தது.

ஆனால், அதற்குப் பின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார் ஆதிக். குறிப்பாக இடைவேளை காட்சி. அதற்கு பின் இரண்டாம் பாதியில் வரும், சில்க் ஸ்மிதா காட்சி, மகன் எஸ்.ஜே. சூர்யாவிற்கும், தந்தை எஸ்.ஜே. சூர்யாவிற்கும் இடையிலான காட்சி, திரையரங்கை தெறிக்கவிடும் மாஸ் சீன்ஸ் என அடுத்தடுத்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதையை அமைத்துள்ளார் ஆதிக்.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும், முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்துவிட்டார். ஒளிப்பதிவில் எந்த ஒரு குறையும் இல்லை, சூப்பர் பக்கா. ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலம். எடிட்டிங் படத்தை தாங்கி நிற்கிறது. கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு நம்மை 1970ஸ் மற்றும் 1990ஸ் காலகட்டத்திற்கு கூட்டி செல்கிறது.

குறிப்பாக ஜி. வி. பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவல். விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஜி.வியின் பின்னணி இசையும் முக்கிய காரணம். மேலும் பழைய பாடல்களை அருமையாக ரீமிக்ஸ் செய்து திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து விட்டார் ஜி. வி.

பிளஸ் பாயிண்ட்

விஷால் நடிப்பு

வில்லத்தனத்துடன் நகைச்சுவை கலந்து நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு

இடைவேளை காட்சி, இரண்டாம் பாதி திரைக்கதை

ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி தொடக்கத்தில் ஏற்பட்ட 30 நிமிடம் தொய்வு

லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் மார்க் ஆண்டனி திரையரங்கை தெறிக்க விட்டது

 

 

Related articles

Recent articles

spot_img