நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

Published:

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனது படமான ‘மார்க் ஆண்டனி’யை வெளிவரவிடாமல் தடுத்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் விஷால்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயன்ட்டில் இருக்கும் ஒரு நபரிடம் கேட்டேன்.

காரணம் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் 65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும்போது அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்லும்போது எனக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் மட்டும்தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதவாது ரூல்ஸ் இருக்கிறதா? நான் அவர்களையும் மீறி குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ததால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.

‘ரத்னம்’ படத்துக்குக் கூட பிரச்சினை வரும். வேண்டுமென்றே வேட்டு வைப்பார்கள். இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது. நட்புக்கும், வியாபாரத்துக்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. யாரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள விடமாட்டேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் விஷால் அளித்துள்ள இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img