2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டன்று பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடும் மக்களை மகிழ்விக்கும் விதமாக தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் வருகிற புத்தாண்டுக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி
விஜய் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக இரண்டு புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதில் ஒன்று ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் தான். இப்படம் புத்தாண்டன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா புத்தாண்டன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக 3 படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும், காலை 11.30 மணிக்கு அயலி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மதியம் 3 மணிக்கு ஜெயம் ரவியின் தீபாவளி ரிலீஸ் திரைப்படமான பிரதர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் டிவி
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தாண்டு தினத்தை ஒட்டி மூன்று புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதன்படி டிசம்பர் 31ந் தேதி இரவு 10 மணிக்கு விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் புத்தாண்டன்று காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் ஆதியின் பிடி சார் திரைப்படமும், அன்று பிற்பகல் 1.30 மணிக்கு சூர்யாவின் ஜெய் பீம் படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
சன் டிவி
சன் டிவியில் மட்டும் புத்தாண்டுக்கு புதுப்படங்கள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்க்கார் திரைப்படம் வருகிற ஜனவரி 1ந் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த பேட்ட திரைப்படம் புத்தாண்டன்று மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.