நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.
ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.
இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.