டீசல்- திரைவிமர்சனம்

Published:

கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல் குறித்த படம்.
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார்.

இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.

இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார்.

இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.

கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை..

நடிகர்கள்

ஒரு மாஸ் ஆக்ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார். படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு.

சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

இயக்கம்

மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.

படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது.

இசை

திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.

ஒளிப்பதிவு

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Related articles

Recent articles

spot_img