மலையாளத்தில் கடந்த 2013 இல் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021 இல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதே சமயம் முதல் பாகத்திற்கு இணையான அதற்கு குறைவில்லாத வரவேற்பை இந்த இரண்டாம் பாகமும் பெற்றது. மலையாளத்தை தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்த படத்திற்கான ரசிகர் வட்டம் உருவானது. இந்த இரண்டு பாகங்களும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ‘திரிஷ்யம் 3’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப் கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் கதாநாயகன் மோகன்லால் இந்த படம் வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் திரிஷ்யம் 3 படம் வரும் அக்டோபர் இரண்டாம் திகதி வெளியாகும் என இதற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

,

