சினிமாவில் தனது தந்தை சுகுமாரன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு தனக்கென ஒரு தடம்பதித்தவர் பிருத்விராஜ்.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, காவியத்தலைவன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார் பிருத்விராஜ்.
காவியத்தலைவன் திரைப்படத்திற்காக சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படத்திலும் பிரபாஸுக்கு இணையாக வில்லத்தனத்தில் அசுரனாக மிரட்டி இருந்தார் என்றே கூறலாம்
சமீபத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த “ஆடுஜீவிதம் தி கோட் லைஃப்” நேர்முறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூலிலும் கிட்டதட்ட 120 கோடியை தாண்டி சக்கை போடு போட்டு வருகிறது.
சினிமாவில் வாரிசு அரசியலை அதிகமாக முன்னெடுக்கும் போது, தான் தன் தந்தையின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டாலும்,
தனது கடின உழைப்பின் மூலமாக மட்டுமே இந்த இடத்தை அடைந்ததாக அடிக்கடி கூறி தெளிவுப்படுத்துவார் பிருத்விராஜ்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக தடம் பதித்த பிருத்விராஜ், மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பலரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் பிருத்விராஜ் இயக்கிய லூசிஃபர் திரைப்படமும் ஒன்று.
லூசிஃபர் படத்தில் தரமான அரசியல் கதையுடன் விறுவிறுப்பை கூட்டி எதிர்பார்க்க முடியாத திருப்பத்தை தந்து ரசிகர்களை வியக்க வைத்த பிருத்விராஜ் மீண்டும் இதன் அடுத்த பாகத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
பான் இந்தியா மூவியாக ரெடியாக உள்ள இதில், முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் மீண்டும் இணைய உள்ளனர் என்பது தகவல். அடுத்த ஒரு மெகா ஹிட் கன்ஃபார்ம்!
லூசிஃபர் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது யார் என்றால் அஜித்தை விடாமுயற்சியில் வச்சு செய்கிறதே அதே லைகா நிறுவனம் தான்.
நிதி நெருக்கடி, அது! இது! என்று பல கதைகளை அவிழ்த்து விட்ட லைகா தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கும் லூசிஃபர் 2 இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு லடாக்கில் முடிந்துள்ளது அடுத்த கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டுக்கு அடுத்து உள்ள மகேந்திரா சிட்டியில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.