‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ என தமிழ் சினிமாவின் மாறுபட்ட சில படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன். இந்த ‘அநீதி’ படத்தையும் அப்படியான ஒரு மாறுபட்ட படமாகக் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் இது வசந்தபாலன் படமல்ல, ஏதோ ஒரு வழக்கமான மசாலாப் படம் என சொல்ல வைக்கின்றன. இடையில் மட்டுமே இது வசந்தபாலன் படமாக உள்ளது.
சிறு வயதில் அப்பாவை ஒரு முதலாளித்துவ கொடுமையால் இழந்தவரான அர்ஜுன் தாஸுக்கும், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வயதான பணக்காரப் பெண் ஒருவரது வீட்டில் அடிமை போல வேலை செய்யும் துஷாராவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. துஷாராவின் முதலாளியம்மாவான அந்த பாட்டி திடீரென இறந்து போகிறார். துஷாராவும் அர்ஜுனும் அந்த பாட்டியின் பிணத்தை தனியார் மார்ச்சுவரியில் வைக்கிறார்கள். அவரது மகன், மகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒரு சிக்கல் காரணமாக பாட்டி இறந்ததை வெளிநாட்டில் வசிக்கும் பாட்டியின் வாரிசுகளிடம் சொல்லாமல் மறைக்கிறார் துஷாரா. ஆனால், அவர்கள் திடீரென வந்து நிற்கிறார்கள். பாட்டி இயற்கையாக சாகவில்லை, துஷாராவும், அர்ஜுனும் தான் கொன்றார்கள் என வாரிசுகள் போலீசிடம் செல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘வெயில்’ கதிர், முருகேசன், மீனாட்சி, தங்கம் போலவும், ‘அங்காடித் தெரு’ கனி, ஜோதி லிங்கம் போலவும் இந்தப் படத்தில் திரு, சுப்புலட்சுமி கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திரு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ், சுப்பு கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்களது நடிப்பால் இந்தப் படத்தைத் தூண் போல தாங்கி இருக்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருப்பவர் அர்ஜுன். அப்பாவின் மரணம் தந்த மனநல பாதிப்பு, யாரைப் பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்பவருக்கு துஷாராவின் காதல் மாற்றத்தைத் தருகிறது. ‘சைக்கோ’ என்று சொல்லாமல் மனநலம் பாதிப்புடைய கதாபாத்திரம் என்று படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் அர்ஜுன் தாஸ் நடத்தும் ரத்த வெறியாட்டம் அவரை சைக்கோவிற்கு மேலும் சொல்ல வைக்கிறது.
படத்திற்குப் படம் துஷாரா விஜயனின் நடிப்பு மாறி வருகிறது. பணக்கார வீட்டில் ஏழை வேலைக்காரியாக இருப்பவர்கள் என்னவெல்லாம் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை இவரது கதாபாத்திரம் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர். சுப்பு கதாபாத்திரத்தில் துஷாராவின் நடிப்பு அவ்வளவு இயல்பாய் உள்ளது. எத்தனை அடி வாங்கினாலும் அமைதி, காதலன் கிடைத்த பின் மகிழ்ச்சி, பாட்டி இறந்த பின் பதட்டம், கைதான பின் மாறும் குணம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் இந்தக் கால ஷோபாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.
பாட்டியின் வாரிசுகளான அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் வந்த பிறகு படம் ஒரு யதார்த்த நிலையிலிருந்து அப்படியே தடம் மாறுகிறது. அந்த அமெரிக்க ரிட்டர்ன்ஸ் குழு வந்த பிறகு நடிப்போ நடிப்பென்று நடித்து பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பின் படத்தின் திரைக்கதை எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்துவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் என்றால் ஒரு பிளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். அப்பாவாக காளி வெங்கட், அவரது அநியாய மரணம் கலங்க வைக்கும்.
ஜிவி பிரகாஷ்குமார் இசையில் ‘பூ நாழி பொன் நாழி’ பாடல் அருமை. பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் தூண்டிவிடுகிறார்.
படத்தின் ஆரம்பத்தில் யாரோ சிலரை அர்ஜுன் தாஸ் கொல்வதான காட்சிகள் வருகின்றன. அப்புறம் ஒரு வருடம் முன்னால் என பிளாஷ்பேக் காட்சிகளாக கதை நகர்கிறது. இடையிடையே வீட்டுக்குள் அவர் யாரையோ துரத்தும் காட்சிகளும் வருகின்றன. இடைவேளையில் துஷாராவைக் கொல்லவும் துடிக்கிறார். இந்த திரைக்கதை யுத்தியை ஆரம்பத்திலேயே சொல்வதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு உணவு டெலிவரி பாய், ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் மீது காதல் கொள்வதிலிருந்து படத்தை ஆரம்பித்திருந்தால் இன்னும் ‘இன்வால்வ்மென்ட்’ கிடைத்திருக்கும். திரைக்கதையில் இந்த நியதியை பின்பற்றி இருக்கலாம்.
அநீதி – அ(சந்த) நீதி…