ஜெயிலர் – விமர்சனம்

Published:

ரஜினிகாந்த் ஜெயிலர் படம் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அப்படி ஒரு படத்தைக் கொடுத்து ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினிகாந்த் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய ஸ்டைலிஷ் ஆன ஆக்ஷன் கொடுத்து அசத்தியிருக்கிறார். நெல்சன் இதற்கு முன் இயக்கிய அவரது படங்களில் அவருக்கென ஒரு திரைக்கதை அமைப்பை உருவாக்கி இருந்தார். அந்த அமைப்பிலேயே ரஜினி கதாபாத்திரத்தையும் உருவாக்கி அதில் என்னவெல்லாம் விஷயங்களை சேர்க்க வேண்டுமோ அதை சரியாகச் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். அவருடைய மகன் வசந்த் ரவி, உதவி கமிஷனர். சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்து அதில் தீவிரமாக இறங்குகிறார் வசந்த் ரவி. சிலை கடத்தலை செய்யும் விநாயகம் ஆளான சரவணனை கைது செய்து விசாரிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் விநாயகம் வசந்த் ரவியை கடத்தி விடுகிறார்.

ஆனால் வசந்த் ரவி கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ரஜினியின் குடும்பத்தினரையும் கொல்ல வில்லன் விநாயகம் முயற்சிக்கிறார். தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கி தனது குடும்பத்தினரை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ரஜினிகாந்த். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். நெல்சன் எண்ணங்களுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை காட்சிக்கு காட்சி அலப்பறை செய்ய வைக்கிறார் ரஜினிகாந்த். கடந்த சில படங்களாக ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு அவரது படங்கள் அமையவில்லை.

ஆனால் இந்தப் படத்தில் அந்தக் குறை எதுவும் இல்லை. இத்தனை வயதிலும் தன்னுடைய நடிப்பிலும், ஸ்டைலிலும் ரஜினி அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. ஆரம்பத்தில் அப்பாவியான மனிதராக, பேரனுக்கு பயந்தவராக இருக்கிறார். மகனைக் காணவில்லை என்றதும் களத்தில் இறங்குகிறார். பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்ச நேரமே வந்தாலும் இளமையான ரஜினிகாந்த் அதிரடி காட்டுகிறார். ரஜினியின் வயதுக்குரிய கதாபாத்திரம் அமைத்திருப்பது சிறப்பு.

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் வந்தாலும் ரஜினியின் நண்பர்களாக சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இடைவேளை வரை படத்தை கலகலப்பாக கொண்டு செல்பவர் யோகிபாபு. அவருக்கும் ரஜினிக்குமான காட்சிகள் எல்லாம் நெல்சன் ஸ்டைல் காமெடி. இடைவேளைக்கு பின் தெலுங்கு நடிகர் சுனில் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. அந்த தொய்வை கிளைமாக்ஸில் சரி செய்து விட்டார் நெல்சன்.

படத்தில் கதாநாயகி என்று யாரும் கிடையாது. ஒரே ஒரு பாடலுக்கும் ஒரு சில காட்சிகளுக்கும் மட்டும் வந்து போகிறார் தமன்னா. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மாஸ்டர் ரித்விக் ஆகியோர் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகின்றனர்.

மலையாள நடிகர் விநாயகம் படத்தின் மெயின் வில்லன். கொலைகளை செய்வதில் கொடூரமாகவும் வில்லத்தனத்தில் மாறுபட்டும் தெரிகிறார்.

அனிருத் இசையில் காவாலா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் சிச்சுவேஷன் பாடல்களாக இருந்தாலும் ஈர்க்கவில்லை. பின்னணி இசை ஓகே. ரஜினியின் ஹீரோயிச வசனத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

இடைவேளை வரை கலகலப்பாகவும் சென்டிமெண்ட் ஆகவும் நகர்கிறது படம். இடைவேளைக்குப்பின் ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. போதைப்பொருள் கடத்தலில் இருந்து சிலை கடத்தலுக்கு மாறி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். கிளைமாக்ஸில் ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்கும் காட்சிகள் அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

‛தர்பார், அண்ணாத்த’ படங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஜெயிலர் ரசிகர்களை திருப்திப்படுத்தலாம்.

‛ஜெயிலர்’ – ‛டைகர் கா ஹூக்கும்’

Related articles

Recent articles

spot_img