Home Blog Page 49

காதலியை கரம்பிடிக்கிறார் கவின்

0

சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கிய அவருக்கு ‛லிப்ட், டாடா’ படங்கள் வெற்றியை தந்தன. தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அதை கவின் தரப்பிலேயே அறிவித்துள்ளனர்.

தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இடம் தெரிவிக்கப்படவில்லை. கவினின் சொந்த ஊரில் நடக்கலாம் என தெரிகிறது.

முன்னதாக 2019ல் நடைபெற்ற ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின் இருவரும் அவரவர் சினிமாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.

‘ கதாநாயகி ‘யை தேர்வு செய்யும் ராதிகா, கே.எஸ்.ரவிகுமார்

0

விஜய் டிவி தொடர்ந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘ கதாநாயகி ‘ என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இது திரைப்படத்திற்கு கதாநாகியை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாகும். இதற்காக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதல்கட்ட தேர்வு நடந்தது. நடிக்க ஆர்முள்ள பெண்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

அவர்களுக்கு பாடும் திறன், ஆடும் திறன், நடிப்பு திறன் வெளிப்படுத்தும் வகையிலான சுற்றுகள் நடத்தப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். இதன் முடிவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிறவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவரை கே.எஸ்.ரவிகுமார் தனது படத்தில் அறிமுகப்படுத்துவார். வேறு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்துகிறார்கள். கலக்கப்போவது யார் புகழ் குரேஷி தொகுத்து வழங்குகிறார். கடந்த 29ம் திகதி தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

‘சர்தார் 2’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை

0

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் ‘சர்தார்’. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது என அப்போதே படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.

கார்த்தி தற்போது நடித்து வரும் ‛ஜப்பான்’ படம், நலன் இயக்கத்தில் நடிக்கும் ஒரு படம், பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் ஆகியவற்றிற்குப் பிறகு ‘சர்தார் 2’ படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. ‘ஜப்பான்’ மற்றும் நலன் இயக்கும் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பிரேம்குமார் இயக்க உள்ள படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கப் போகிறார்.

‘சர்தார்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் ‘சர்தார் 2’ படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பிஎஸ் மித்ரன் இயக்கிய ‘இரும்புத் திரை, ஹீரோ’ படங்களுக்குப் பிறகு மித்ரன், யுவன் கூட்டணி ‘சர்தார் 2’ படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு யுவன், கார்த்தி கூட்டணி, “பையா, பிரியாணி, நான் மகான் அல்ல, விருமன்” ஆகிய படங்களில் இணைந்தது.

 

யாரும் எதிர்பார்க்காத புது போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 7.. | Bigg Boss Tamil Season 7

0

இந்தியாவின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ் தமிழின்’ முதல் சீசன் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொழுதுபோக்கு, நாடகம், சிரிப்பு என அனைத்தையும் கொண்ட இந்த ரியாலிட்டி ஷோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு சீசன் முடிந்ததும் அடுத்த சீசனுக்காக எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.

அந்தவகையில், கடந்த ஆறாவது சீசனில் முகமது அசீம் வெற்றியாளாராக தேர்தெடுக்கப்பட்டார். விக்ரமன் ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும், இந்த சீசனுக்கு டிஆர்பி ரேட்டிங்கும் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஆறாவது சீசன் முடிவடைந்ததில் இருந்து ஏழாவது சீசனுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவுள்ளது. ஆம்! பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் திகதி 2023:

பிக் பாஸ் தமிழ் 7 சீசன், 08 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பாகவுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் ஏற்கனவே தொடங்கிவிட்டது, வீட்டு வேலைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார். முந்தைய சீசனின் அமோக வெற்றியின் காரணமாக இந்த முறை எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்:

ஒவ்வொரு பிக் பாஸ் ரசிகர்களும் பங்கேற்பாளர்களைப் பற்றி அறிய காத்திருக்கிறார்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சில பெயர்களை பட்டியலிட்டுள்ளோம்.

  • உமா ரியாஸ் கான்
  • பாவனா
  • மகபா ஆனந்த்
  • கேபிஒய் சரத்
  • ஷிவின் கணேசன்
  • ஆயிஷா
  • மணிகண்ட ராஜேஷ்
  • ரோஷினி ஸ்ரீதரன்
  • ஜனனி
  • அமுதவன்
  • விஜே கதிரவன்
  • ஜாக்குலின் லிடியா
  • ரவீனா தாஹா
  • இர்ஃபான்
  • மிலா
  • சசிலாயா
  • சஞ்சனா சிங்
  • சௌந்தர்யா பாலா
  • டி.எஸ்.கே
  • ஷாலு

பிக் பாஸ் முந்தைய சீசன்களின் வெற்றியாளர்கள்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 1: ஆரவ் நபீஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 2: ரித்விகா
பிக் பாஸ் தமிழ் சீசன் 3: முகன் ராவ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4: ஆரி அர்ஜுனா
பிக் பாஸ் தமிழ் சீசன் 5: தர்ஷன் தியாகராஜா
பிக் பாஸ் தமிழ் சீசன் 6: முகமது அசீம்

தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் 5 முக்கிய சீரியல்கள் பற்றி வெளியான தகவல்!

0

தினம் தோறும், இல்லத்தரசிகளை கவரும் விதத்தில், ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில்… தமிழக ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் 5 சீரியல்கள் குறித்த தகவல் TRP தரவரிசை அடிப்படையில் வெளியாகியுள்ளது.

கயல்:

கயல் சீரியல் தான் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பார்க்கப்படும் தொடராக உள்ளது. 11.71 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள இந்த தொடரில் தற்போது கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொண்டு… அவரை திருமணம் செய்து கொள்வாரா? என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

காதல், பாசம், குடும்ப செண்டிமெண்ட், பகை, பழிவாங்கும் முயற்சி என… அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், மீனா குமாரி, அபினவ்யா, அவினாஷ் அசோக், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல்:

எதிர்நீச்சல் சீரியல், 11.24 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஆதிரையின் திருமண எபிசோடு இதுவரை எந்த சீரியலும் பெற்றிராத அதிக TRP-யை கைப்பற்றி சாதனை செய்த நிலையில்,

தற்போது ஆதி குணசேகரன்… அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை இழந்து விட்டதால் அதை எப்படி மீட்டெடுப்பார் என்கிற எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மதுமிதா, மாரி முத்து, ஹரி ப்ரியா, கனிகா, கமலேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

வானதைப்போல:

அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும், இந்த தொடர் சின்னத்திரை ‘பாசமலர்’ என கூறலாம். இந்த தொடர் 10.13 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் ஸ்ரீ குமார், மான்யா ஆனந்த், சங்கீதா, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இனியா:

நான்காவது இடத்தில், 9.68 TRP புள்ளிகளுடன் இனியா தொடர் உள்ளது. இந்த தொடர் துவங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கிட்ட தட்ட இந்த தொடரும் ஆணாதிக்கத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜா ராணி தொடர் நாயகி ஆல்யா மானசா, ரிஷி ஆகியோர் நாயகன் – நாயகியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மனைவி:

ஐந்தாவது இடத்தில்… 9.45 TRP புள்ளிகளுடன் மிஸ்டர் மனைவி தொடர் உள்ளது. இதில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரும் குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடராக மாறியுள்ளது. அதே சமயம்… ஒவ்வொரு முறையும் டாப் 5 லிஸ்டில் இடம்பெறும் சுந்தரி தொடர் இந்த லிஸ்டில் இடைபிடிக்கவில்லை.

11 ஆண்டுளுக்குப் பிறகு மலையாளத்திற்கு திரும்பிய ராகினி திவேதி

0

கன்னடத்தில் கடந்த 2009ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2020ல் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறைச்சாலைக்கும் சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஷீலா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது.

சில உண்மைகளை தேடி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பயணிக்கும் ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையப்படுத்தி நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மோகன்லாலுடன் காந்தகார் மற்றும் 2012ல் மம்முட்டியுடன் பேஸ்புக் 2 பேஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ராகினிக்கு 11 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுடன் பாலியல் உரையாடல் : ஷில்பா ஷெட்டி, கீதா கபூருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

0

சோனி தொலைக்காட்சி சேனலில் ‘சூப்பர் டான்சர்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 3வது சீசன் தற்போது ஒளிப்பாகிறது. இந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையிடம் அவரது பெற்றோர்கள் குறித்து ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமந்தா உடன் குரங்கு எடுத்துக் கொண்ட செல்பி

0

நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் தான் நடித்து வந்த சிட்டாடல் என்கிற வெப் தொடரையும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.

பொதுவாக படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆன்மீக சுற்றுலாவோ அல்லது தனது நண்பர்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவது சமந்தாவின் வழக்கம். அதிலும் அவர் தற்போது படப்பிடிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது நண்பர்களுடன் பாலி தீவிற்கு உற்சாக சுற்றுலா சென்றுள்ள சமந்தா, விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பாலி தீவில் உள்ள உபத் குரங்கு காட்டிற்கு தனது தோழியுடன் விசிட் அடித்ததுடன் அங்குள்ள குரங்கு ஒன்றுடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

இல்லை இல்லை அங்குள்ள குரங்கு ஒன்று சமந்தாவுடன் செல்பி எடுத்து அவரை மகிழ்வித்துள்ளது. என்று சொல்லலாம் இதுகுறித்து ஸ்பாட் தி மங்கி என்கிற கேப்சனுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்திய சந்தீப் கிஷன்

0

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வட சென்னை அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தியேட்டரில் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதனுடன் ‘கேப்டன் மில்லர் டீசரை’ திரையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, “கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அண்ணா இயக்கி, நடிக்கும் தனுஷ் 50வது படத்திலும் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

டைனோசர்ஸ் – விமர்சனம்

0

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசக் கதை. ஏற்கெனவே இம்மாதிரியான படங்களை நிறைய முறை பார்த்துவிட்டதால் புதிதாக ஏதாவது இருந்தால் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என இயக்குனர் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி புதிதாக எதையும் யோசிக்காமல் ஒரு பழி வாங்கும் கதையையே கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மாதவன்.

வட சென்னையில் ரிஷி, மாறா இருவரும் நெருங்கிய நண்பர்கள். ரிஷி ஒரு டெய்லர் கடையை நடத்தி வருகிறார். மாறா அடியாளாக இருந்து மாறி திருமணம் செய்து கொண்டு ரவுடியிசத்தை விட்டு இருக்கிறார். பிரபல ரவுடியான கவின் ஜே பாபுவின் மைத்துனர் கொலை வழக்கிற்காக எட்டு பேர் சரண்டர் ஆக வேண்டிய சூழ்நிலையில் நண்பன் மாறாவுக்குப் பதிலாக தனா சரண்டர் ஆகிறார். ஆனால், ஆள் மாறாட்டம் நடந்ததைத் தெரிந்து கொண்ட கவின், பழிக்குப் பழியாக மாறாவைக் கொலை செய்கிறார். அதற்குப் பழி வாங்க மாறாவின் நண்பனான ரிஷியின் தம்பி உதய் கார்த்திக் துடிக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நட்பு, துரோகம், பழி வாங்கல், காதல், குடும்பம், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த ‘கேங்ஸ்டர்’ படமாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகள் சிறப்பாக இருக்கிறதே என பாராட்ட வைக்க, அடுத்த காட்சியே சுமாராக அமைந்து தடுமாற வைத்துவிட்டது. இடைவேளைக்குப் பின் இன்னும் சுவாரசியமான காட்சிகளை அமைத்திருந்தால் வட சென்னை சம்பந்தப்பட்ட படங்களில் இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் மூன்று கதாநாயகர்கள் என்பது போல ஆரம்பித்தாலும் போகப் போக உதய் கார்த்திக் மட்டும்தான் படத்தின் கதாநாயகன் என அவரை மையப்படுத்தியே திரைக்கதை நகர்கிறது. அடிதடி சண்டையே வேண்டாமென ஒதுங்கி நிற்பவர் உதய் கார்த்திக். தனது அண்ணனின் நண்பனுக்காக ஏரியா ரவுடிகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். மண்ணு என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் போகப் போக கதாபாத்திரத்திற்குள் புதைந்துவிடுகிறார் உதய் கார்த்திக்.

நெருங்கிய நண்பர்களாக ரிஷி, மாறா. புதிதாகத் திருமணமான நண்பனுக்காக சிறைக்குச் செல்லவும் தயங்காத நண்பர் ரிஷி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நண்பர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறார். இடைவேளைக்குப் பின் இவரும் சிறையிலிருந்து வெளியில் வந்து நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே. கொஞ்ச நேரமே வந்தாலும் மாறாவின் மரணம் கலங்க வைத்துவிடுகிறது.

வட சென்னையின் இரண்டு முக்கிய ரவுடிகளாக மானேக்ஷா, கவின் ஜே பாபு. இருவரைப் பார்த்தாலுமே ரவுடி என நம்ப முடிகிறது. தோற்றத்தில் இருப்பதை நடிப்பிலும் வெளிப்படுத்தி மிரட்டுகிறார்கள். படத்தில் யாருக்காவது ஜோடி வைத்தாக வேண்டும் என கதாநாயகிகள் கதாபாத்திரத்தை திணித்திருக்கிறார்கள். மாறாவின் புது மனைவியாக யாமினி சந்தர், உதய் கார்த்திக்கின் காதலியாக சாய் பிரியா தேவா நடித்திருக்கிறார்கள்.

போபோ சசி வட சென்னைக்குரிய பின்னணி இசையை தனித்து கொடுத்திருக்கிறார். கதைக்களத்தை தன் ஒளிப்பதிவில் இயல்பாய் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி ஆனந்த். காட்சிகளின் நீளத்தை எடிட்டர் கலைவாணன் குறைத்திருக்கலாம்.

ஆங்காங்கே வசனங்கள் நச்சென்று அமைந்துள்ளன. கதாபாத்திரங்களும், சில பரபரப்பான காட்சிகளும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஒரு காட்சி வந்தால் சீக்கிரம் முடியாமல், நீண்டு கொண்டே போகிறது. இடைவேளைக்குப் பின் என்ன மாதிரியான காட்சிகளை வைப்பது என இயக்குனர் தடுமாறியிருக்கிறார். இவற்றையெல்லாம் சரி செய்திருந்தால் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கும்.

டைனோசர்ஸ் – கொஞ்சம் ‘நோ’, கொஞ்சம் ‘சரி’