Home Blog Page 52

சினிமா ஆகிறது மீனா குமாரி வாழ்க்கை

0

பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனா குமாரி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற பல புகழ்பெற்ற படங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

அவர் அதிகமான சோகம் ததும்பும் படங்களில் நடித்ததால் ‘டிராஜிடி குயின்’ என்றே அழைக்கப்பட்டார். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து நிஜவாழ்க்கையில் அந்த பட்டத்திற்கு பொருந்தமானவராகிப்போனார்.

மீனா குமாரியின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் சினிமா ஆகிறது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா இந்த படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இவர் தமிழில் சிவாஜி, எந்திரன், புலி படங்களில் பணியாற்றி உள்ளார். மீனாகுமாரி வேடத்தில் நடிக்க கிர்த்தி சனோன் தேர்வாகி உள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக 8வது முறையாக மம்முட்டி தேர்வு

0

கேரள மாநில அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 7 மாநில விருதுகளை பெற்றுள்ள மம்முட்டிக்கு இது 8வது விருதாகும். சிறந்த படமாக அவர் நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி இருந்தார், தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்திருந்தார்.

மற்ற விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:

சிறந்த நடிகை: வின்சி அலோஷியஸ் (ரேகா)
சிறந்த இயக்குநர்: மகேஷ் நாராயணன் (அறியிப்பு)
சிறந்த குணச்சித்திர நடிகர்: பி பி குஞ்சிகிருஷ்ணன் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த குணச்சித்திர நடிகை: தேவி வர்மா (சவுதி வெள்ளக்கா)
ஸ்பெஷல் ஜூரி விருது: (நடிப்பு) குஞ்சாக்கோ போபன் (நா தான் கேஸ் கொடு) மற்றும் அலென்சியர் லே லோபஸ் (அப்பன்)
ஸ்பெஷல் ஜூரி விருது (இயக்கம்): – பிஸ்வஜித் எஸ் மற்றும் ரரீஷ்
பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படம்: நா தான் கேஸ் கொடு
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: பல்லோட்டி 90’ஸ் கிட்ஸ்
சிறந்த கதை எழுத்தாளர்: கமல் கே.எம் (பதா)
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த திரைக்கதை (தழுவல்): ராஜேஷ் பின்னடன் (ஒரு தெக்கன் தள்ளு கேஸ்)
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): எம் ஜெயச்சந்திரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)
சிறந்த பாடகர்: கபில் கபிலன் (பல்லோட்டி 90’ஸ் கிட்ஸ் திரைப்படத்தின் “கனவே” பாடலுக்காக)
சிறந்த பாடகி: மிருதுளா வாரியர் (பத்தொன்பதாம் திரைப்படத்தின் “மயில்பீலி இலக்குன்னு கண்ணா” பாடலுக்காக)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): டான் வின்சென்ட் (நா தான் கேஸ் கொடு)
சிறந்த படத்தொகுப்பாளர்: நிஷாத் யூசுப் (தல்லுமாலா)
சிறந்த ஒளிப்பதிவாளர்: மனேஷ் மாதவன் (எல வீழா பூஞ்சிரா) மற்றும் சந்துரு செல்வராஜ் (வழக்கு)

மறைந்த உம்மன் சாண்டி குறித்து அவதூறு : வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்

0

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து மலையாள வில்லன் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் ‘யார் இந்த உம்மன் சாண்டி?, அவர் செத்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?, என்னுடைய அப்பாவும் செத்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் செத்துவிட்டார். உம்மன் சாண்டி செத்ததற்காக எதற்கு 3 நாள் விடுமுறை விடுகின்றனர்? அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்” என்று அந்த வீடியோவி பேசி உள்ளார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி விநாயகனை கைது செய்ய வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

விநாயகன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்லை. வாய்ப்பு கேட்டு சென்ற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு வழக்கும் இவர் மீது உள்ளது.

நடிகர் விநாயகன் தமிழில் ‛திமிரு, சிலம்பாட்டம்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

காமிக்ஸ் புத்தகமாக வெளியாகும் மின்னல் முரளி : சாண்டியாகோ விழாவில் வெளியீடு

0

கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும் எதிர்பாராத மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும் அதன்மூலம் அவர்களுக்குள் ஏற்படும் மோதலும் என வித்தியாச கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இரண்டாம் பாகம் கூட இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் காமிக்ஸ் புத்தகமாகவும் உருவாகி உள்ளது. டிங்கிள் காமிக்ஸ் ஸ்டுடியோ இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இன்று துவங்கி நாளை மறுநாள் வரை சாண்டியாகோவில் நடைபெற இருக்கும் சர்வதேச காமிக்ஸ் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.

ரிஷப் ஷெட்டியின் ஆதரவு படம் ; வழக்கு போட்டு தடுத்து பரபரப்பை கிளப்பிய ரம்யா

0

தமிழில் குத்து, பொல்லாதவன், சிங்கம்புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் என்கிற ரம்யா. தொடர்ந்து சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்தியவர் பின்னர் அரசியலில் குதித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீப வருடங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று கன்னடத்தில் வெளியாக இருக்கும் ‘ஹாஸ்டல் குடுகாரு பேக்ககிட்டரே’ என்கிற படத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படம் வெளியாக தடை பெற்றுள்ளார்.

இதன் விவரம் என்னவென்றால் இந்த படக்குழுவினர் நடிகை ரம்யாவை வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கி உள்ளனர். தற்போது அந்த பாடல் காட்சியில் இருந்து ரம்யா இடம்பெற்றுள்ள சில காட்சிகளை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக டிரைலர்களிலும் புரமோக்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரம்யாவோ தனது அனுமதி இல்லாமல் இந்த பாடலை படக்குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ள நீதிமன்றம் ரம்யா குறிப்பிட்டபடி அவரது காட்சிகள் இடம் பெற்ற ட்ரெய்லர் மற்றும் புரோமோக்களை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் படத்தில் அவரது பாடலும் இடம்பெறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதுமட்டுமல்ல 50 லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படத்தில் இருந்து முதல் புரமோ வெளியிடப்பட்ட போது அதில் ரம்யா நடித்த பாடலில் இருந்து சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. அப்போது இதுகுறித்து ரம்யா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தனது பாடல் படத்தில் முழுவதுமாக இடம் பெறும் என அவர் நினைத்திருந்த வேளையில் இந்த பாடல் வெறும் புரமோஷனுக்காக மட்டுமே படமாக்கப்பட்டது என்கிற தகவல் அவருக்கு தெரிய வந்ததால் தான் கோபமாகி இப்படி நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த பாடலுக்காக பணம் எதுவும் பெறாமல் அவர் நடித்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை நடிகர் ரக்சித் ஷெட்டி வெளியிடுகிறார் என்பதும் இதில் ரிஷப் ஷெட்டி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இன்று இந்தப்படத்தின் ஆன்லைன் புக்கிங் திறக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனையை படக்குழுவினர் ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து விட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

அநீதி – விமர்சனம்

0

‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ என தமிழ் சினிமாவின் மாறுபட்ட சில படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன். இந்த ‘அநீதி’ படத்தையும் அப்படியான ஒரு மாறுபட்ட படமாகக் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் இது வசந்தபாலன் படமல்ல, ஏதோ ஒரு வழக்கமான மசாலாப் படம் என சொல்ல வைக்கின்றன. இடையில் மட்டுமே இது வசந்தபாலன் படமாக உள்ளது.

சிறு வயதில் அப்பாவை ஒரு முதலாளித்துவ கொடுமையால் இழந்தவரான அர்ஜுன் தாஸுக்கும், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வயதான பணக்காரப் பெண் ஒருவரது வீட்டில் அடிமை போல வேலை செய்யும் துஷாராவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. துஷாராவின் முதலாளியம்மாவான அந்த பாட்டி திடீரென இறந்து போகிறார். துஷாராவும் அர்ஜுனும் அந்த பாட்டியின் பிணத்தை தனியார் மார்ச்சுவரியில் வைக்கிறார்கள். அவரது மகன், மகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒரு சிக்கல் காரணமாக பாட்டி இறந்ததை வெளிநாட்டில் வசிக்கும் பாட்டியின் வாரிசுகளிடம் சொல்லாமல் மறைக்கிறார் துஷாரா. ஆனால், அவர்கள் திடீரென வந்து நிற்கிறார்கள். பாட்டி இயற்கையாக சாகவில்லை, துஷாராவும், அர்ஜுனும் தான் கொன்றார்கள் என வாரிசுகள் போலீசிடம் செல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘வெயில்’ கதிர், முருகேசன், மீனாட்சி, தங்கம் போலவும், ‘அங்காடித் தெரு’ கனி, ஜோதி லிங்கம் போலவும் இந்தப் படத்தில் திரு, சுப்புலட்சுமி கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திரு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ், சுப்பு கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்களது நடிப்பால் இந்தப் படத்தைத் தூண் போல தாங்கி இருக்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருப்பவர் அர்ஜுன். அப்பாவின் மரணம் தந்த மனநல பாதிப்பு, யாரைப் பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்பவருக்கு துஷாராவின் காதல் மாற்றத்தைத் தருகிறது. ‘சைக்கோ’ என்று சொல்லாமல் மனநலம் பாதிப்புடைய கதாபாத்திரம் என்று படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் அர்ஜுன் தாஸ் நடத்தும் ரத்த வெறியாட்டம் அவரை சைக்கோவிற்கு மேலும் சொல்ல வைக்கிறது.

படத்திற்குப் படம் துஷாரா விஜயனின் நடிப்பு மாறி வருகிறது. பணக்கார வீட்டில் ஏழை வேலைக்காரியாக இருப்பவர்கள் என்னவெல்லாம் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை இவரது கதாபாத்திரம் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர். சுப்பு கதாபாத்திரத்தில் துஷாராவின் நடிப்பு அவ்வளவு இயல்பாய் உள்ளது. எத்தனை அடி வாங்கினாலும் அமைதி, காதலன் கிடைத்த பின் மகிழ்ச்சி, பாட்டி இறந்த பின் பதட்டம், கைதான பின் மாறும் குணம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் இந்தக் கால ஷோபாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.

பாட்டியின் வாரிசுகளான அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் வந்த பிறகு படம் ஒரு யதார்த்த நிலையிலிருந்து அப்படியே தடம் மாறுகிறது. அந்த அமெரிக்க ரிட்டர்ன்ஸ் குழு வந்த பிறகு நடிப்போ நடிப்பென்று நடித்து பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பின் படத்தின் திரைக்கதை எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்துவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் என்றால் ஒரு பிளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். அப்பாவாக காளி வெங்கட், அவரது அநியாய மரணம் கலங்க வைக்கும்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் ‘பூ நாழி பொன் நாழி’ பாடல் அருமை. பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் தூண்டிவிடுகிறார்.

படத்தின் ஆரம்பத்தில் யாரோ சிலரை அர்ஜுன் தாஸ் கொல்வதான காட்சிகள் வருகின்றன. அப்புறம் ஒரு வருடம் முன்னால் என பிளாஷ்பேக் காட்சிகளாக கதை நகர்கிறது. இடையிடையே வீட்டுக்குள் அவர் யாரையோ துரத்தும் காட்சிகளும் வருகின்றன. இடைவேளையில் துஷாராவைக் கொல்லவும் துடிக்கிறார். இந்த திரைக்கதை யுத்தியை ஆரம்பத்திலேயே சொல்வதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு உணவு டெலிவரி பாய், ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் மீது காதல் கொள்வதிலிருந்து படத்தை ஆரம்பித்திருந்தால் இன்னும் ‘இன்வால்வ்மென்ட்’ கிடைத்திருக்கும். திரைக்கதையில் இந்த நியதியை பின்பற்றி இருக்கலாம்.

அநீதி – அ(சந்த) நீதி…

கொலை – விமர்சனம்

0

படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை புரிய வைக்கிறது. ஒரு கொலை, அந்தக் கொலை எதற்காக, யாரால் நடத்தப்பட்டது, அதைச் செய்தது யார் ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘விடியும் முன்’ என்ற கிரைம் திரில்லர் கதையைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி கே குமார், மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படமாக இந்த ‘கொலை’ படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் உருவாக்கம், அரங்க அமைப்பு, காட்சிகளின் கோணம், விசாரணை, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை இந்தப் படத்தைப் பற்றிப் பேச வைக்கின்றன.

பிரபல மாடலான மீனாட்சி சவுத்ரி அவரது அபார்ட்டிமென்ட்டில் கொல்லப்படுகிறார். அந்த வழக்கு பற்றிய விசாரணையை போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங் நடத்த ஆரம்பிக்கிறார். உதவிக்காக முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியை அழைத்துக் கொள்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். இவர்களில் யாராவது மீனாட்சியைக் கொன்றார்களா அல்லது வேறு யாரும் கொன்றார்களா என்பதை விஜய் ஆண்டனி, ரித்திகா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மனைவியைப் பிரிந்தும், கல்லூரி செல்லும் வயதுடைய மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் விஜய் ஆண்டனி இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். நடுத்தர வயது தோற்றம் என விஜய் ஆண்டனியிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும், முந்தைய படங்களில் பார்த்ததைப் போலவே, அதே உடல் மொழியுடனும், பேச்சுடனும் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்திற்குப் படம் கதாபாத்திரத்திற்கேற்றபடி கொஞ்சம் மாற்றி நடித்தால் அவருக்கு நல்லது. இந்தப் படத்தில் தோற்றத்தில் மாறிவிட்டார், நடிப்பிலும் இனி மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலதிகாரியான ஜான் விஜய்யின் எதிர்ப்பையும் மீறி விஜய் ஆண்டனியை தனக்கு உதவி செய்ய வருமாறு அழைத்து சேர்த்துக் கொள்கிறார் ரித்திகா சிங். நிதானமாகவும், அக்கறையாகவும், எந்த அலட்டலும் இல்லாமல் தன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார் ரித்திகா.

மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கிரைம் திரில்லர் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை சைக்கோவாகக் காட்டுவது ‘க்ளிஷே’வாக உள்ளது. கொல்லப்படும் மாடலாக அறிமுக நடிகை மீனாட்சி சவுத்ரி. மாடல் என்று சரியாக நம்பும் அளவிற்கு நல்ல தேர்வு. அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை சரியாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தின் இயக்குனர் பாலாஜி கே குமார் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் என்பதால் ஹாலிவுட் படங்களுக்குரிய ஸ்டைலை தமிழிலும் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அவருடைய எண்ணத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டர் ஆர்கே செல்வா சரியான ஒத்துழைப்பைத் தந்திருக்கிறார்கள். டெக்னிக்கலாக இந்தப் படம் பார்வையாளர்களிடம் பேசப்படும்.

ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிட்டபடி ‘உருவாக்கம்’ இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக நம் மனதைத் தொட மறுக்கிறது. கொல்லப்பட்டவர் மீது நமக்கு அனுதாபம் வந்தால்தான் அந்த உணர்வு கிடைக்கும். நடக்கும் விசாரணை சஸ்பென்ஸாகக் கடந்து போனாலும் ‘சம்திங் மிஸ்ஸிங்’ என்று தோன்றுகிறது.

கொலை – உணர்வை மிஞ்சும் கலை

வெளியானது சூர்யாவின் கங்குவா பட புரோமோ வீடியோ

0

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘கங்குவா’. ஹிந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலத்து கதையில் இந்த படம் பிரமாண்டமாய் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புரோமோ டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கங்குவா’வின் உலகம் வீரம் மிக்கதாகவும் பார்வையாளர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தையும் தர உள்ளது. மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மையமாக இருக்கும்.

பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட புரோமோ டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பான்-இந்தியத் திரைப்படமான ‘கங்குவா’வின் உருவாக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டியிலும் உருவாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.முன்னதாக கங்குவா படத்தின் ப்ரோமோ வீடியோ பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் சிவா: கங்கு என்றால் நெருப்பு. இதை தான் தலைப்பாக வைத்துள்ளோம். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. கற்பனையாக வடிவமைக்கபட்டுள்து. இந்தக் கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. சரித்திர காலத்து பகுதி 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நிறைய போர்க்களக் காட்சிகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குறிப்பாக மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொண்டது மிகவும் சிரமமாக இருந்தது. 3டியில் பத்து மொழிகளில் படம் வெளியாகிறது என்றார்.

 

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

0

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றார்.

தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சரித்திரம் கலந்த படமாக உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டமான கிளிம்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவித்தனர். தற்போது நள்ளிரவு 12.01 மணி நேரத்தில் இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி சென்றது யார் தெரியுமா?

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இந்த வாரம் நடைபெற உள்ளது. போட்டி களத்தில் இருக்கும் போட்டியாளர்களின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதாவது, மைம் கோபி அவர்கள் டைட்டிலை வெல்ல சிருஷ்டி டாங்கே இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாகவும் விசித்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.‌

எந்த அளவுக்கு உண்மை என்பது நாளைய எபிசோட்டில் தெரிந்து விடும்.