Home Blog Page 57

திரையுலகில் 26 ஆண்டுகளைக் கடந்த யுவன்

0

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது இரண்டாவது மகனான யுவன்ஷங்கர் ராஜா, தனது 16வது வயதில் ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படம் வெளிவந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் ஆகியுள்ளது.

தான் இசையமைப்பாளரானதற்கு ஏஆர் ரஹ்மானும் ஒரு காரணம் என யுவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் புதிய ஒலியமைப்பு, வித்தியாசமான இசை என தனது ஆரம்ப கால கட்டங்களில் புதிய அலையை ஏற்படுத்தினார். அவர் வந்த பின் இளையராஜாவின் இசையுடனான ஒப்பீடு அதிகமாக ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தனது அப்பாவின் பெருமையும், மதிப்பும் எந்த விதத்திலும் குறைந்து விடக் கூடாது என இசையமைப்பாளராக ஆனதாக அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

26 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மிகவும் இளமையாக இருக்கிறது என இன்றைய இளைஞர்களும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் யுவனின் இசையில் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துள்ளன. யுவன், நா முத்துக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் சில வருடங்கள் ஆட்சி செய்து வந்ததை ரசிகர்கள் இப்போதும் நினைவு கூறுவார்கள்.

எவ்வளவோ முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் இன்னமும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. விஜய் நடித்த ஒரே ஒரு படத்திற்குத்தான் யுவன் இசையமைத்திருந்தார். ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் கூட யுவனுக்கு வாய்ப்பு தர மறுத்தாலும் யுவன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இன்றைய இளம் இயக்குனர்களுடனும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். அதற்குக் கடந்தாண்டு வெளிவந்த ‘லவ் டுடே’ படம் மிகப் பெரும் உதாரணம்.

இசை வாரிசு ஆக சினிமாவுக்குள் வந்தாலும் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் இந்த யுவ(ன்) ராஜா.

50வது நாளில் ‘வாரிசு, துணிவு’

0

இந்தாண்டு பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றன. இரண்டு படங்களும் இந்தாண்டின் 50 நாட்களை கடந்த படமாக அமைந்துள்ளது.

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் மற்றும் பலர் நடித்து இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் திகதி வெளிவந்த படம் ‘வாரிசு’. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த வாரம் ‘வாரிசு’ படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் படம் சென்னை, கோவை ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது.

இப்படத்துடன் வெளிவந்த அஜித் நடித்த ‘துணிவு’ படம் இருபது நாட்களுக்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் ‘துணிவு’ திரைப்படம் இன்னும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பெங்களூரு ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் 50வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் ‘வாரிசு’ படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமான ‘லியோ’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது.